PUBLISHED ON : அக் 06, 2025 12:00 AM

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன்: கரூர் விவகாரத்தில், தமிழக போலீசாரின் அணுகுமுறை ஒருதலைபட்சமாக இருக்கிறது. த.வெ.க., பொதுச்செயலர் ஆனந்த் மீது வழக்கு பதிவு செய்த போலீசார், விஜய் மீது வழக்கு போடாதது ஏன்? ஆக, வலுத்தவனுக்கு ஒரு நீதி; இளைத்தவனுக்கு வேறொரு நீதியா? விஜய் மீது வழக்கு போட முடியா விட்டால், ஆனந்த் மீதான வழக்கை திரும்ப பெற வேண்டும்.
டவுட் தனபாலு: நீங்க சொல்றது நுாற்றுக்கு நுாறு சரி... இதே, ஜெயலலிதா மட்டும் இப்ப முதல்வராக இருந்திருந்தால், சம்பவம் நடந்ததுமே கரூரை விட்டு ஓட்டம் பிடிச்சு, சென்னைக்கு விமானத்தில் வந்திறங்கிய விஜயை, அங்கேயே, 'அலேக்'கா கைது பண்ணி, புழல் சிறையில் போட்டிருப்பார்... 'விஜய் மீது கை வைத்தால், அவர் பெரிய ஆளாகிடுவோரா'ன்னு தி.மு.க., அரசு பயப்படுதோ என்ற, 'டவுட்'தான் வருது!
பத்திரிகை செய்தி: தமிழ க அரசை கண்டித்து, த.வெ.க., வின் திண்டுக்கல் மத்திய மாவட்ட இளைஞரணி சார்பில் வத்தலகுண்டு, நிலக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. அதில், முன்னாள் நீதிபதி அருணா ஜெகதீசனை, முன்னாள் ஐ.ஏ.எஸ்., அதிகாரி என குறிப்பிட்டிருப்பது கிண்டலுக்குள்ளாகி வருகிறது.
டவுட் தனபாலு: அது சரி... இந்த மாதிரி அரைவேக்காட்டுத் த னமான கட்சியினரை கூட வச்சுக்கிட்டு, 'தமிழகத்தை ஆளணும்'னு விஜய் நினைக் கலாமா என்ற, 'டவுட்'தான் வருது!
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்: கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து, 63 பேர் பலியானபோது, முதல்வர் ஸ்டாலின் அங்கு செல்லவில்லை. கரூரில், தன்னுடைய பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி, 41 பேர் பலியானபோது த.வெ.க., தலைவர் நடிகர் விஜய் வரவில்லை. ஆனால், முதல்வர் ஸ்டாலின், இரவோடு இரவாக அங்கு சென்றார். இச்சம்பவத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு லட்சங்களில் நிவாரணம் கொடுப்பதாக, இரு தரப்பிலும் அறிவித்துள்ளனர். நிவாரணம் கொடுப்பதால் மட்டும் எல்லாம் சரியாகி விடாது.
டவுட் தனபாலு: அதானே... கரூரில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தமிழக அரசு தலா, 10 லட்சம் ரூபாயும், விஜய் தலா, 20 லட்சம் ரூபாயும் குடுத்திருக்காங்க... இது நிவாரணம் இல்லை... ரெண்டு பேருமே செய்த தவறுக்கு பிராயசித்தம் தேடியிருக்காங்க என்பது தான், 'டவுட்' இல்லாத உண்மை!