PUBLISHED ON : அக் 15, 2025 12:00 AM

தமிழக பா.ஜ., செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத்: உலக நாடுகளுக்கு முன்னுதாரணமாக, மூன்றாவது முறையாக சரித்திர வெற்றி பெற்று, மக்கள் ஆட்சி நடத்தும் பிரதமர் மோடியின் பா.ஜ., ஆட்சியை, பாசிச ஆட்சி என்று கூற, தமிழக துணை முதல்வர் உதயநிதிக்கு தகுதியில்லை. தமிழக மக்கள் தி.மு.க.,வினரை விரட்டி அடிக்க உறுதி பூண்டுள்ளதை அறிந்து, தேர்தல் வரை நல்லாட்சி நடத்தி, ஓட்டளித்த மக்களுக்கு நன்றியுடன் செயல்பட வேண்டும்.
டவுட் தனபாலு: உங்க வாதப்படி பார்த்தால், நாலரை வருஷமா தி.மு.க., நல்லாட்சி தரலை... இதனால, தி.மு.க., மீது மக்கள் அதிருப்தியில இருப்பாங்க... உங்க பேச்சை கேட்டு, கடைசி ஆறு மாசத்துல நல்லாட்சி தந்து, மக்களும் மனசு மாறிட்டா, அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணிக்கு ஆபத்தாகிடும் என்பதை நீங்க யோசிக்கலையோ என்ற, 'டவுட்' வருதே!
lll
ஹிந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத்: கமலையும், மக்கள் நீதி மய்யம் கட்சியையும், தன் கட்டுப்பாட்டுக்குள் தி.மு.க., எப்படி கொண்டு வந்ததோ, அதேபோல் கரூர் சம்பவத்தை வைத்து விஜயையும், த.வெ.க.,வையும் தன் கட்டுப்பாட்டில் தி.மு.க., கொண்டு வந்து விடும். எனவே, வருங்கால கமல் தான், த.வெ.க., தலைவர் ஜோசப் விஜய்.
டவுட் தனபாலு: கமல் சினிமாவில், 'ரிட்டயர்' ஆகும் நேரத்தில் அல்லவா அரசியலுக்கு வந்தாரு... ஆனா, விஜய் அப்படியில்லையே... முன்னணி ஹீரோவாக இருக்கும்போதே, அதை விட்டுட்டு அரசியல்ல குதிச்சிருக்காரே... அதனால, கமல் கட்சிக்கு ஏற்பட்ட கதி, விஜய் கட்சிக்கு ஏற்படுமா என்பது, 'டவுட்' தான்!
lll
தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை: காஞ்சிபுரத்தில் தனியார் நிறுவனம் தயாரித்த இருமல் மருந்தால், ம.பி.,யில் 23 குழந்தைகள், ராஜஸ்தானில் மூன்று குழந்தைகள் உயிரிழந்துள்ளன. தமிழக அரசு, மருந்து ஆய்வாளர்கள் இருவரை, 'சஸ்பெண்ட்' மட்டும் செய்திருக்கிறது. தமிழக அரசுக்கும், இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது போன்ற மாயத் தோற்றத்தை உருவாக்கி இருக்கின்றனர்.
டவுட் தனபாலு: அந்த மருந்து நிறுவனம், 2011ல் இருந்தே செயல்படுது... அப்ப இருந்த அ.தி.மு.க., ஆட்சியாளர்களும் அந்த நிறுவனத்தை கண்டுக்காம தானே இருந்திருக்காங்க... அவங்க இப்ப உங்க கூட்டணியில் இருப்பதால், தி.மு.க., அரசை மட்டும் போட்டு தாக்குறீங்க என்பது, 'டவுட்'டே இல்லாம தெரியுது!
lll