PUBLISHED ON : அக் 19, 2025 12:00 AM

காங்., மூத்த தலைவர் மணிசங்கர் அய்யர்: கடந்த, 1941ல் சென்னையில் நடந்த முஸ்லிம் லீக் பொதுக்குழு கூட்டத்துக்கு வந்த முகமது அலி ஜின்னாவை, ஈ.வெ.ரா., வரவேற்றார். அந்த கூட்டத்தில் பேசிய ஈ.வெ.ரா., 'பாகிஸ்தான், கட்டாயம் உருவாக வேண்டும் என்ற உங்கள் கோரிக்கையை முழுதுமாக ஏற்கிறேன். தயவு செய்து என் கோரிக்கையையும் ஏற்று கொள்ளுங்கள். இந்துஸ்தான், பாகிஸ்தான், திராவிடஸ்தான் என, மூன்றாக இந்தியா பிரிக்கப்பட வேண்டும்' என்றார்.
டவுட் தனபாலு: நல்லவேளையா, ஈ.வெ.ரா., கோரிக்கை ஏற்கப்படலை... அது மட்டும் நிறைவேறியிருந்தால், திராவிடஸ்தானை வாங்கியவங்க, காலப்போக்குல அதுல இருந்து தமிழகத்தையும் தனியா பிய்ச்சு எடுத்திருப்பாங்க என்பதில், 'டவுட்'டே இல்லை!
தமிழக கனிமவளத் துறை அமைச்சர் ரகுபதி: கடந்த அ.தி.மு.க., ஆட்சியில் முதல்வராக இருந்த பழனிசாமி, சட்டசபையில் எதிர்க்கட்சிகளின் காலி இருக்கைகளை பார்த்து பேசிய வீராதி வீரர்; காற்றோடு கத்தி சண்டை போட்டவர். இன்று வெட்டி வசனம் பேசுகிறார். கூவத்துாரில் ஊர்ந்தெடுக்கப்பட்டு, டேபிளுக்கு அடியில் ஒளிந்து கிடந்த சூராதி சூரர். தற்போது, சட்டசபையில் வெளிநடப்பு செய்து, வீர வசனம் பேசுகிறார். கரூரில் நடந்த, 41 பேர் இறப்பில், கூட்டணி அரசியல் செய்யும் கேடுகெட்ட அரசியல்வாதியை, தமிழகம் இதுவரை கண்டதில்லை. தமிழக மக்களிடம் அவரது மயான அரசியல் எடுபடாது.
டவுட் தனபாலு: அடடா... என்ன நாகரிகமான வார்த்தைகள்... ஒருகாலத்தில், அந்த கட்சியில் இருந்து அமைச்சர் பதவி சுகத்தை அனுபவிச்சிட்டு, இப்ப அந்த கட்சி தலைமையை இவ்வளவு கேவலமா திட்டுறீங்களே... இப்படி எல்லாம் திட்டினால் தான், இப்ப இருக்கும் இடத்தை காப்பாத்திக்க முடியும்னு நினைக்குறீங்களோ என்ற, 'டவுட்'தான் வருது!
பத்திரிகை செய்தி: தமிழக காங்கிரஸ் மற்றும் அறக்கட்டளைக்கு சொந்தமாக, தமிழகம் முழுதும் பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகள் உள்ளன. இவற்றை மீட்க, முன்னாள் மாநில தலைவர் தங்கபாலு தலைமையில், 31 பேர் கொண்ட குழுவை, தமிழக காங்., தலைவர் செல்வப்பெருந்தகை நியமித்தார். இக்குழு தமிழகம் முழுதும் பயணித்து, பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள, 200க்கும் மேற்பட்ட சொத்து ஆவணங்களை மீட்டுள்ளது.
டவுட் தனபாலு: சொத்து ஆவணங்களை மட்டும் மீட்டு என்ன புண்ணியம்...? சொத்துகள் யார், யாரிடம் இருக்குன்னு கணக்கெடுத்து, அவற்றை மீட்க வேண்டாமா...? ஓடிப்போன மாட்டின் கயிற்றை மட்டும் மீட்டுட்டு, மாட்டையே மீட்டுட்ட மாதிரி 'பில்டப்' காட்டணுமா என்ற, 'டவுட்'தான் வருது!