PUBLISHED ON : அக் 20, 2025 12:00 AM

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்: சென்னையில், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து, கொடூரமாக கொன்ற வழக்கில் தஷ்வந்துக்கு, உயர் நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. ஆனால், போதிய சான்று இல்லை என, உச்ச நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. தாயையும் கொன்ற கொடூரன், இந்த குற்றத்தை செய்திருக்க மாட்டான் என உச்ச நீதிமன்றம் முடிவுக்கு வந்தது, ஏற்க முடியாத மன வலியை தருகிறது. தஷ்வந்த் குற்றவாளி இல்லை என்றால், சிறுமியை கொன்றது யார்?
டவுட் தனபாலு: இந்த மாதிரி கொடூர சம்பவங்களில், குற்றவாளிகள் சுதந்திரமாக உலா வருவதை யாராலும் ஜீரணிக்கவே முடியாது... சட்டத்தின் பிடியில் இருந்து எந்த குற்றவாளி தப்பித்தாலும், கடவுளின் நீதிமன்றம் தரும் தண்டனையில் இருந்து தப்ப முடியாது என்பதில், 'டவுட்'டே இல்லை!
அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் செல்லுார் ராஜு: மதுரை மாநக ராட்சியில், வரலாறு காணாத அளவிற்கு, தி.மு.க., கவுன் சிலர்கள் வரி முறைகேட்டில் ஈடுபட்டனர். இந்த விவகாரம் வெளி வந்ததும், 5 மண்டல தலைவர்கள், 2 நிலைக்குழு தலைவர்கள் பதவிகளை ராஜினாமா செய்தனர். அதோடு விவகாரத்தை முடிக்க, தி.மு.க., அரசு திட்ட மிட்டது. ஆனால், அ . தி.மு.க.,வின் அழுத்தம் காரணமாக, இப்போது, மேயர் இந்திராணியும் ராஜினாமா செய்துள்ளார்.
டவுட் தனபாலு: மதுரை மட்டுமல்ல... தமிழகத்தின் எல்லா மாநகராட்சிகள்லயும் இந்த மாதிரி ஏகப்பட்ட தில்லுமுல்லுகள் நடக்கத் தான் செய்யுது... மதுரையில், 'பங்கு' தகராறில் தான் பலரும் மாட்டிக்கிட்டாங்க... தேர்தலில், அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்து, எல்லாத்தையும் தோண்டி துருவினா, ஏகப்பட்ட திமிங்கிலங்கள் சிக்கும் என்பதில், 'டவுட்'டே இல்லை!
அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி: காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள, ஸ்ரீசன் மருந்து நிறுவனத்தில் தயாரிக்கப்பட்ட இருமல் மருந்தை குடித்து, மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களைச் சேர்ந்த, 26 குழந்தைகள் இறந்துள்ளன. இந்த நிறுவனத்தில், கடந்த இரண்டு ஆண்டுகளாக, தமிழக மருந்து கட்டுப்பாட்டு துறையினர் ஆய்வு மேற்கொள்ளவில்லை. அரசின் அலட்சியம் காரணமாக, 26 பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்துள்ளன.
டவுட் தனபாலு: அந்த மருந்து நிறுவனத்திற்கு, உங்க கட்சி ஆட்சியில், 2011ல் தான் அனுமதி கொடுத்திருக்காங்க... அப்புறம், 10 வருஷங்களா, அதாவது, 2021 வரைக்கும், அ.தி.மு.க., ஆட்சி தானே இருந்துச்சு... அப்பவே, அங்க முறையா ஆய்வு நடத்தி, முறைகேடுகளை தடுத்திருந்தால், இந்த பலிகள் நடந்திருக்காது என்பதில், 'டவுட்'டே இல்லை!