PUBLISHED ON : அக் 23, 2025 12:00 AM

தமிழக பா.ஜ., மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன்: தமிழக அரசுக்கு மத்திய அரசு ஒதுக்கிய நிதியில், 13,000 கோடி ரூபாயை, தமிழக அரசு செலவு செய்யவில்லை. முதல்வர் ஸ்டாலின், தினமும் ஒரு, 'டிராமா' போடுகிறார். பா.ஜ.,வில் சேர்ந்து விட்டால், 'வாஷிங் மிஷினில்' போட்ட மாதிரி, எல்லாரும் சுத்தமாகி விடுவரா எனவும் கேட்கிறார். செந்தில் பாலாஜியை, அவர் எந்த, 'வாஷிங் மிஷினில்' போட்டு எடுத்தார்?
* டவுட் தனபாலு: செந்தில் பாலாஜி மட்டுமா...? அ.தி.மு.க.,வில் இருந்தப்ப, 'ஊழல்வாதிகள்' என, தி.மு.க.,வினரால் விமர்சிக்கப்பட்ட ராஜ கண்ணப்பன், ரகுபதி, முத்துசாமி, அனிதா ராதாகிருஷ்ணன், சாத்துார் ராமச்சந்திரன்னு பலர் தி.மு.க., வாஷிங் மிஷினில் போட்டு, சுத்தமாக்கப்பட்டிருக்காங்க என்பதில், 'டவுட்'டே இல்லை!
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன்: 'சனாதன எதிர்ப்பை திருமாவளவன் உயர்த்தி பிடிக்கிறாரே; தி.மு.க., கூட்டணி கட்டுக்கோப்பாக இருக்க, உறுதுணையாக இருக்கிறாரே' என்பது தான் பா.ஜ., உள்ளிட்ட பலருக்கும் பிரச்னை. நாளையே, 'தி.மு.க., கூட்டணி வேண்டாம்' என நான் அறிக்கை வெளியிட்டால், 'ஆஹா, ஓஹோ' என, அவர்கள் மகிழ்ச்சி அடைவர். ஏன் இன்னொரு தீபாவளி போல் கொண்டாடுவர்.
* டவுட் தனபாலு: 'காங்., - கம்யூ., உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் எல்லாம் வேஸ்ட்... தி.மு.க., இன்று ஆட்சியில் இருப்பதற்கு காரணமே வி.சி.,க்கள் தான்' என்று அக்கட்சி தலைமைக்கு சொல்லாம சொல்றாரோ என்ற, 'டவுட்'தான் வருது!
தி.மு.க., பொதுச்செயலர் துரைமுருகன்: முதல்வர் ஸ்டாலின் திட்டப்படி, வரும் சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள, பல்வேறு முன்னெடுப்புகளை, தி.மு.க., மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், 'மத்திய அரசின் முன் தமிழகம் தலைகுனியாது' என்ற பிரசாரத்தை, தி.மு.க., துவக்க உள்ளது. அதன் ஒரு பகுதியாக, 'என் ஓட்டுச்சாவடி; வெற்றி ஓட்டுச்சாவடி' என்ற பயிற்சி கூட்டம், வரும் 28ம் தேதி மாமல்லபுரத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடக்க உள்ளது.
* டவுட் தனபாலு: கடந்த, 2021 சட்டசபை தேர்தலில், நீங்க தந்த வாக்குறுதிகளை முழுசா நிறைவேற்றலை... அதனால, தேர்தல் வெற்றி கேள்விக்குறியாகிடுமோ என பயந்து தான், 'உங்களுடன் ஸ்டாலின், நலம் காக்கும் ஸ்டாலின், ஓரணியில் தமிழகம்'னு விதவிதமான திட்டங்களை அறிவிக்கிறீங்க என்பது, 'டவுட்'டே இல்லாம தெரியுது!

