PUBLISHED ON : அக் 28, 2025 12:00 AM

அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி: அ.தி.மு.க., கூட்டணிக்கு விஜய் வரவில்லை என்றாலும், அ.தி.மு.க., விற்கு பாதிப்பு இல்லை. நிச்சயமாக அ.தி.மு.க., ஆட்சி தான் வரப்போகிறது. விஜய் வந்தால், 220 தொகுதிகளில் அ.தி.மு.க., கூட்டணி வெற்றி பெறும்; வராவிட்டால், 150 தொகுதிகளில் வெற்றி பெறும். அதே நேரத்தில், எங்கள் கூட்டணிக்கு விஜய் வருவது தான், அவரது எதிர்காலத்திற்கும், பாதுகாப்பிற்கும் நல்லது.
டவுட் தனபாலு: அது சரி... விஜய், உங்க கூட்டணிக்கு வந்தால் தான், அவருக்கு பாதுகாப்புன்னு நீங்க பயமுறுத்துறீங்க... உங்க கூட்டணிக்கு வந்துட்டா, ஆளுங் கட்சி கோபத்துக்கு ஆளாகிடுவாரு... எது எப்படியோ... தேர்தலுக்கு பின், ரெண்டு திராவிட கட்சி கள்ல எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும், விஜய்க்கு சிக்கல் தான் என்பதில், 'டவுட்'டே இல்லை!
தமிழக காங்., தலைவர் செல்வப்பெருந்தகை: செம்பரம் பாக்கம் ஏரியை நான் தான் திறக்க வேண்டும் என சொல்லவில்லை. திறப்பதற்கு முன், தகவல் சொல்ல வேண்டும் என்று தான் கேட்கிறேன்; கேட்பதே தவறா? 'ஏரி திறப்பை எம்.பி., - எம்.எல்.ஏ.,வுக்கு சொல்வது கட்டாயம் அல்ல' என்று அதிகாரிகள் கூறுகின்றனர். மக்கள் பிரதிநிதி களை விட, அதிகாரிகள் மேலானவர்களா?
டவுட் தனபாலு: பாசனத்துக்காக ஏரி, அணைகளை திறக்கும்போது, அந்த பகுதி மக்கள் பிரதிநிதிகளை அழைக்கணும் என்பது உண்மை தான்... ஆனா, மழை, வெள்ள காலத்துல, அவசரமா ஏரியை திறக்கிறப்ப, எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள், கவுன்சிலர்களுக்கு எல்லாம் பாக்கு, வெற்றிலை வச்சு அழைப்பு கொடுத்துட்டு இருக்க முடியுமா என்ற, 'டவுட்' வருதே!
தமிழக சிறு குறு நடுத்தர தொழில்கள் துறை அமைச்சர் அன்பரசன்: செம்பரம்பாக்கம் ஏரி திறந்த அன்று, செல்வப்பெருந்தகை தொலைபேசி வாயிலாக என்னிடம் பேசினார். 'ஏரியில் தண்ணீர் திறந்த தகவல் எனக்கும் தெரியாது' என கூறினேன். பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை ஆ லோசனை கூட்டத்தில், ஏரி கள், அணைகளின் நிலைமைக்கு ஏற்ப, அதிகாரிகளே திறக்கலாம் என முதல்வர் அறிவுறுத்தினார். அதற்கேற்ப, அதிகாரிகள் ஏரியை திறந்திருக்கக்கூடும்.
டவுட் தனபாலு: சரி விடுங்க... பேசாம, இந்த மழைக்காலம் முடியும் வரைக்கும் செல்வப்பெருந்தகையை செம்பரம்பாக்கம் ஏரி அருகிலேயே கூடாரம் போட்டு தங்க சொல்லுங்க... பெருமழை பெய்யுறப்ப அதிகாரிகள் அங்க வந்து, அவர் கையாலயே ஏரியை திறந்து விட்டுட்டா, 'டவுட்' இல் லாம பிரச்னை தீர்ந்து போயிடும்!

