PUBLISHED ON : அக் 31, 2025 12:00 AM

  பா.ம.க., நிறுவனர் ராமதாசின் மகளும், கட்சியின் செயல் தலைவருமான ஸ்ரீகாந்தி: எனக்கு எம்.பி., - எம்.எல்.ஏ., ஆக வேண்டும் என்ற ஆசை கிடையாது. அதற்காக, நான் அரசியலுக்கு வரவில்லை. ஆனால், தந்தை ராமதாஸ் விரும்பினால், எம்.எல்.ஏ.,வாக வாய்ப்பு கிடைக்கும். அன்புமணி விஷயத்தில் ராமதாஸ் பெருத்த ஏமாற்றம் அடைந்துள்ளார். வரும் சட்டசபை தேர்தலுக்காக, முன்னணி கட்சியினருடன் ராமதாஸ் பேச்சு நடத்தி வருகிறார். விரைவில் கூட்டணி குறித்த அறிவிப்பு வெளியாகும்.
டவுட் தனபாலு: 'என் குடும்பத்தில் இருந்து யாராவது அரசியலுக்கு வந்தால், என்னை சவுக்கால் அடிங்க'ன்னு ஒருகாலத்தில் உங்க தந்தை சொன்னார்... ஆனா, இப்ப என்ன நடக்குது... பாட்டாளி மக்கள் கட்சி என்பது, ராமதாசின், 'மக்கள்' கட்சியா மாறிடுச்சு  என்பதில், 'டவுட்'டே இல்லை!
தமிழக சபாநாயகர் அப்பாவு: அதிகமான கல் குவாரிகள் உள்ள சட்டசபை தொகுதி, என் தொகுதியான ராதாபுரம் தான். ஆனால், அங்கிருக்கும் ஒரு கல் குவாரி கூட, என் பெயரிலோ, என் குடும்பத்தினர் பெயரிலோ கிடையாது.
டவுட் தனபாலு: அது சரி... காங்., - த.மா.கா., - தி.மு.க.,ன்னு பல கட்சிகள்ல இருந்து, இப்ப சபாநாயகராக இருக்கும் உங்களுக்கு நீண்ட நெடிய அனுபவம் இருக்கே... உங்க பெயரிலோ, குடும்பத்தினர் பெயரிலோ குவாரி வச்சிருக்கும் அளவுக்கு, நீங்க அரசியல் அப்பாவியா இருப்பீங்களா... அதனால தான் இப்படி பகிரங்கமா சவால் விடுறீங்க என்பதில், 'டவுட்'டே இல்லை!
த.வெ.க., தலைவர் விஜய்: கட்சி பணிகளையும், செயல்பாடுகளையும் ஒருங்கிணைப்பதற்கு, புதிதாக நிர்வாக குழு நியமிக்கப்பட்டு உள்ளது. பொதுச்செயலர் ஆனந்த், தேர்தல் பிரசார மேலாண்மை பிரிவு பொதுச்செயலர் ஆதவ் அர்ஜுனா, கொள்கை பரப்பு செயலர் அருண்ராஜ் உள்ளிட்டோர் அடங்கிய, 28 பேர் இதில் இடம் பெற்றுள்ளனர். இந்த நிர்வாக குழுவிற்கு, கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
- டவுட் தனபாலு: கட்சிக்கு, 150க்கும் மேற்பட்ட மாவட்டச் செயலர்கள், பொதுச்செயலர்கள், தேர்தல் பிரிவு நிர்வாகிகள்னு நியமிச்சுட்டா மட்டும் போதுமா... தேர்தலில் வென்று காட்டினால் தான், உங்களை மக்கள் ஏற்றுக்கொண்டனரா என்பது, 'டவுட்' இல்லாம தெரியவரும்!

