PUBLISHED ON : நவ 01, 2025 12:00 AM

தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை: தமிழக நகராட்சி நிர்வாகத் துறை பணி நியமனங்களில், ஆழமாக வேரூன்றிய ஊழல் மோசடியை அமலாக்கத் துறை அடையாளம் கண்டுள்ளது. இவ்விவகாரத்தில் சி.பி.ஐ., விசாரணை நடத்த வேண்டும். தமிழக மக்களுக்கு நீதி நிலைநாட்டப்பட வேண்டும்.
டவுட் தனபாலு: இப்பதான், ஒரு துறையின் ஊழல் அம்பலத்துக்கு வந்துள்ளது... தேர்தல் நெருங்க நெருங்க, இந்த மாதிரி பல துறைகளில் நடந்த ஊழல்களை அமலாக்கத் துறை அம்பலப்படுத்தும் என்பதில், 'டவுட்'டே இல்லை... தேர்தல் பிரசாரத்தில் உங்களுக்கு நல்ல தீனி காத்துட்டு இருக்கு என்பதிலும், 'டவுட்'டே இல்லை!
lll
பத்திரிகை செய்தி: 'தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணிகள், நவ., 4 முதல் துவங்கும்' என தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. இதற்கு, தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சிகள் எதிர்ப்பு தெரிவிக்கின்றன. இது தொடர்பாக, தி.மு.க., சார்பில், முதல்வர் ஸ்டாலின் தலைமையில், அனைத்து கட்சி கூட்டம் நாளை நடக்கிறது. இதில் பங்கேற்குமாறு, த.வெ.க., பொதுச்செயலர் ஆனந்தை, தி.மு.க., தலைமை நிலையச் செயலர் பூச்சி முருகன் சந்தித்து அழைப்பு விடுத்துள்ளர்.
டவுட் தனபாலு: வாக்காளர் பட்டியல் திருத்த பணி மட்டுமா... தேசிய கல்வி கொள்கை, 'நீட்' தேர்வு எதிர்ப்புன்னு தி.மு.க.,வுக்கும், த.வெ.க.,வுக்கும் கொள்கை அளவில் பெரிய வித்தியாசங்கள் இல்லை... இதனால, தமிழக மக்கள், 'எதுக்கு த.வெ.க.,வுக்கு தனியா ஓட்டு போடணும்'னு முடிவு பண்ணிட்டா, தி.மு.க.,வுக்கு தான் லாபம் என்பதில், 'டவுட்'டே இல்லை!
lll
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன்: தமிழகத்தில், 20,000 அரசு பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர்கள் இல்லை என்ற தகவல் அதிர்ச்சி அளிக்கக்கூடியதாக உள்ளது. இது குறித்து, முதல்வர், துணை முதல்வர் கவனத்திற்கு எடுத்துச் செல்வோம். அரசு உடற்கல்வி ஆசிரியர்கள் மட்டுமல்லாமல், தனியார் பயிற்சியாளர்களையும் அரசு ஊக்குவிக்க வேண்டும். மத்திய அரசும் பாரபட்சம் பார்க்காமல் நிதி ஒதுக்க வேண்டும்.
டவுட் தனபாலு: நீங்க முதல்வர், துணை முதல்வரிடம் எடுத்துச் சொன்னாலும், 'மத்திய அரசு போதிய நிதி ஒதுக்காததால் தான் உடற்கல்வி ஆசிரியர்களை நியமிக்க முடியலை'ன்னு தான் விளக்கம் தருவாங்க... அதுக்காக, மத்திய அரசை கண்டிச்சு உங்களை போராட்டம் நடத்தும்படி துாண்டினாலும் துாண்டுவாங்க என்பது தான், 'டவுட்' இல்லாத உண்மை.
lll

