PUBLISHED ON : நவ 05, 2025 12:00 AM

அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் செல்லுார் ராஜு: யாராக இருந்தாலும், கட்சி தலைமை சொல்வதற்கு கட்டுப்பட வேண்டும். கட்சி என்றால், ஒவ்வொருவருக்கும் ஒரு மன வருத்தம் இருக்கத்தான் செய்யும். எனக்கும் கூடத்தான் மன வருத்தம் இருக்கு. யாருக்கு மன வருத்தம் இருந்தாலும், அதை பொதுச்செயலரை நேரில் பார்த்து தான் சொல்ல வேண்டும். அதை விட்டுவிட்டு, ஊடகங்கள் மூலம் தெரிவிக்கக் கூடாது.
டவுட் தனபாலு: உங்களுக்கு என்ன மன வருத்தம்...? கட்சியில் அமைப்பு செயலர், நாலு சட்டசபை தொகுதிகள் அடங்கிய மதுரை மாநகர மாவட்டச் செயலர், எம்.எல்.ஏ.,ன்னு செல்வாக்கா தானே இருக்கீங்க... இத்தனை இருந்தும், சரியான கூட்டணி அமையாம போயிட்டா, வர்ற சட்டசபை தேர்தல்ல ஜெயிக்க முடியுமா என்ற மன வருத்தத்துல இருக்கீங்களோ என்ற, 'டவுட்' தான் வருது!
***
பத்திரிகை செய்தி: வரும், 9ம் தேதி, நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் நேருவின் பிறந்த நாள். ஆண்டுதோறும் அவரது பிறந்த நாளை, திருச்சி தி.மு.க.,வினர் பிரமாண்டமாக கொண்டாடுவர். வழக்கம் போல், இந்த ஆண்டும் நேரு பிறந்த நாளுக்காக, அவருடைய ஆதரவாளர்கள் மற்றும் தி.மு.க., கவுன்சிலர்கள், கட்சி நிர்வாகிகள் சார்பில், திருச்சி மாநகர பகுதியில் பிரமாண்ட பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. அவை, திடீரென இரவோடு இரவாக அகற்றப்பட்டன.
டவுட் தனபாலு: அது சரி... 'நகராட்சி நிர்வாகத் துறை பணி நியமனங்களில், 800 கோடி ரூபாய்க்கு ஊழல் நடந்திருக்கு'ன்னு எதிர்க்கட்சிகள் எல்லாம் குற்றஞ்சாட்டிட்டு இருக்காங்க... இப்ப போய், பிறந்த நாளை பிரமாண்டமா கொண்டாடி, அவங்க வாய்க்கு அவலாக வேண்டாம்னு நேரு நினைச்சிட்டாரோ என்ற, 'டவுட்' தான் வருது!
***
சிவகங்கை காங்., - எம்.பி., கார்த்தி: கூட்டணி கட்சியினரும் அமைச்சரவையில் பங்கு வகிக்க வேண்டும் என்ற ஆசை காங்கிரசுக்கு உண்டு. ஆளுங்கட்சிக்கு பெரும்பான்மை இருந்தாலும், கூட்டணி கட்சிக்கு அமைச்சரவையில் இடமளிக்கும் ஆந்திர அரசின் மாடல், தமிழகத்திற்கும் பொருந்தும்.
டவுட் தனபாலு: ஆந்திராவில், கூட்டணி கட்சியான ஜனசேனா கட்சி தலைவர் நடிகர் பவன் கல்யாணுக்கு துணை முதல்வர் பதவியை துாக்கி கொடுத்துட்டு, முதல்வர் சந்திரபாபு நாயுடு தவியா தவிச்சிட்டு இருக்கார்... அவர், 'தமிழக மாடலில், நம்ம மகனை துணை முதல்வர் ஆக்காம போயிட்டோமே'ன்னு வருத்தப்படுறதா சொல்றாங்க... இக்கரைக்கு அக்கரை பச்சை என்பதில், 'டவுட்'டே இல்லை!
***

