PUBLISHED ON : நவ 06, 2025 12:00 AM

தமிழக நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் நேரு: 'தி.மு.க., கூட்டணியில் இருப்போர் விரைவில் வெளியே வருவர்' என, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி பகல் கனவு கண்டு பேசி வந்தார். ஆனால், எதுவுமே நடக்கவில்லை. ஆனால், அவரோடு கூட்டணியாக இருந்த பா.ம.க., இரண்டாகி விட்டது. தே.மு.தி.க., வெளியே வந்துவிட்டது. தினகரன், பன்னீர்செல்வம், செங்கோட்டையன் போன்றோர் கட்சியில் இருந்தே வெளியேற்றப்பட்டு விட்டனர். இதனால், அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி தோற்பது உறுதி. இதை அறிந்து தான், தி.மு.க.,வை குறி வைத்து பா.ஜ., அடிக்கிறது. அதற்கு முதல் பலி நான். இதற்கெல்லாம் பயப்படுபவன் அல்ல இந்த நேரு.
டவுட் தனபாலு: டில்லியில் ஒரு காலத்தில் முதல்வராக இருந்த ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலும், இப்படித்தான் மத்திய அரசுக்கு எதிரா சவால் விட்டுட்டு இருந்தாரு... இப்ப, அவர் எங்க இருக்காருன்னே தெரியலை... அவரை விட நீங்க பெரிய தலைவர் இல்லை என்பதால், அடக்கி வாசிப்பதே நல்லது என்பதில், 'டவுட்'டே இல்லை!
***
அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்: குடும்ப அரசியல் என்பது, தி.மு.க.,வில் மட்டும் இல்லை; அ.தி.மு.க.,விலும் இருக்கிறது. அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமியின் மகன், மைத்துனர், மாப்பிள்ளை போன்றவர்கள் அரசியலில் தலையெடுத்து வருகின்றனர். இதை பழனிசாமியும் முழு மனதோடு ஆதரித்து வருகிறார்; இது நாடறிந்த உண்மை. அ.தி.மு.க.,வில் அவர்களின் ஆதிக்கம் அதிகம் உள்ளது.
டவுட் தனபாலு: பழனிசாமியின் மகன் உள்ளிட்ட உறவினர்கள் எந்த அரசியல் நடவடிக்கையிலும் பங்கேற்ற மாதிரி தெரியலையே... நீங்க இப்ப ஆதரிக்கும் சசிகலா, அவங்க அக்கா மகன் தினகரனையும், பன்னீர்செல்வம், தன் மகன் ரவீந்திரநாத்தையும் அரசியல்ல களம் இறக்கியிருக்காங்களே... அது வாரிசு அரசியலா உங்களுக்கு தெரியலையா என்ற, 'டவுட்' தான் வருது!
***
அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ஜெயகுமார்: அ.தி.மு.க.,வில் வாரிசு அரசியல் இருப்பதாக செங்கோட்டையன் கூறியது சரியல்ல. தி.மு.க.,வை போல், குடும்ப ஆதிக்கம் எதுவும் அ.தி.மு.க.,வுக்குள் கிடையாது; அது செங்கோட்டையனின் கற்பனை.
டவுட் தனபாலு: அ.தி.மு.க.,வில் வாரிசு அரசியல் இல்லையா...? உங்க மகன் ஜெயவர்த்தனை தென்சென்னை எம்.பி.,யாக்கி அழகு பார்த்த நீங்க, 'வாரிசு அரசியல் இல்லை'ன்னு எப்படி சொல்றீங்க என்ற, 'டவுட்' வருதே!
***

