
தி.மு.க., பொதுச்செயலர் துரைமுருகன்: ராஜராஜ சோழனுக்கு பின், ராஜேந்திர சோழன் தான் என்பதே வரலாறு. ராஜராஜன் மன்னனாக இருந்தபோதே, அவரது பணியை ராஜேந்திர சோழன் ஏற்று செய்தான்; கடல் கடந்தும் தன் ஆட்சியை நிறுவினான். இன்றைக்கு சொல்கிறேன் குறித்து வைத்து கொள்ளுங்கள்... ஒருநாள், தி.மு.க.,வின் ராஜேந்திர சோழனாக உதயநிதி மாறுவார்.
டவுட் தனபாலு: அது சரி... உங்க மகன் கதிர் ஆனந்துக்கு ஏற்கனவே எம்.பி., பதவி தந்தவங்க, இப்ப மாவட்ட பொறுப்பாளர் பதவியும் தந்துட்டாங்க... குறுநில மன்னர்களா நீங்க பரம்பரை பரம்பரையா பதவிக்கு வரணும்னா, மன்னர் மற்றும் இளவரசருக்கு இப்படி புகழ் பாடிட்டு தான் இருக் கணும் என்பதில், 'டவுட்'டே இல்லை!
****************
தென்காசி காங்., - எம்.எல்.ஏ. , பழனி நாடார்: கடந்த 2021 தேர்தலில், 'இரட்டைகுளம் கால்வாய் திட்டத்தை நிறைவேற்றி தருவோம்' என, தென்காசியில் முதல்வர் ஸ்டாலின் வாக்குறுதி அளித்தார்; அதனால், நான் வெற்றி பெற்றேன். இது தொடர்பாக, முதல்வரிடம் ஐந்து முறை, அமைச்சர் துரைமுருகனிடம் 15 முறை, தங்கம் தென்னரசுவிடம் மூன்று முறை, துணை முதல்வரிடம் இரண்டு முறை என, மனுக்கள் வழங்கியும், திட்டம் நிறைவேறவில்லை. இதனால், 'கூட்டு சேர்ந்து எங்களை ஏமாற்றி விட்டீர்களே' என, தொகுதி மக்களும், விவசாயிகளும் என்னை திட்டுகின்றனர்.
டவுட் தனபாலு: மக்கள் கடும் அதிருப்தியில் இருப்பதால், வர்ற தேர்தல்ல நீங்க மீண்டும் தென்காசியில் நின்றால் ஜெயிக்க முடியுமா என்பது, 'டவுட்'தான்... அதனால, 'எனக்கு 73 வயசாகிட்டதால, இளைஞர்களுக்கு வழிவிடுகிறேன்'னு சொல்லி ஒதுங்கிட்டா, கவுரவமாவது மிஞ்சும் என்பதிலும், 'டவுட்'டே இல்லை!
****************
தமிழக வீட்டுவசதி துறை அமைச்சர் முத்துசாமி: ஒரு கட்சியில் இருந்து ஒருவர் விலகி, இன்னொரு கட்சிக்கு வருவது என்பது, அவராகவே எடுக்கும் முடிவு. அந்த வகையில் தான், மாற்றுக்கட்சிகளில் இருந்து விலகி, தி.மு.க.,வுக்கு பலரும் வருகின்றனர். தி.மு.க.,வுக்கு வாருங்கள் என, யாருக்கும் அழுத்தம் கொடுத்ததில்லை. அந்த வகையில் தான், தி.மு.க.,வில் இணைந்திருக்கிறார் மனோஜ் பாண்டியன். அவரை தொடர்ந்து, நிறைய பேர் வர உள்ளனர்.
டவுட் தனபாலு: உங்க கட்சியி ன் அமைப்பு செயலர் ஆர்.எஸ்.பாரதி, 'எம்.ஜி.ஆர்., - ஜெ.,யின் தொண்டர் களை அரவணைக்க முதல்வர் ஸ்டாலின் காத்திருக்கிறார்... அதனால, எல்லாரும் இங்க வாங்க'ன்னு கூவி அழைக்காத குறையா கூப்பிட்டது, உங்க கவனத்துக்கு வரலையோ என்ற, 'டவுட்'தான் வருது.
****************

