PUBLISHED ON : நவ 13, 2025 12:00 AM

தி.மு.க., துணைப் பொதுச்செயலரும், துாத்துக்குடி எம்.பி.,யுமான கனிமொழி: சிங்கப்பூர் போன்ற சில நாடுகளில், ஒருவர் தொடர்ந்து பலமுறை தேர்தலில் ஓட்டு அளிக்கவில்லை என்றாலோ, சரியான காரணம் இல்லை என்றாலோ, அவருக்கு அந்த நாட்டின் குடியுரிமை பறிக்கப்படும். அதேபோல் நம்முடைய வாக்காளர் பட்டியலிலிருந்து, நம் பெயரை நீக்கி விட்டால், நாளை இப்படிப்பட்ட ஒரு சட்டம் கொண்டு வந்தால், நாம் இந்திய குடிமக்களாக வாழும் உரிமை இருக்குமா அல்லது அது பறிக்கப்படுமா என, சிந்தித்து பார்க்க வேண்டும்.
டவுட் தனபாலு: நீங்கள் சொல்வது சரி தான். சிந்தித்துப் பார்க்கையில், முழு அக்கறையுடன், வாக்காளர் பட்டியலை, நேர்மை யான முறையில் தயாரிக்க வேண்டிய பொறுப்பு, அரசை கையில் வைத்திருக்கும் உங்கள் அண்ணனுடையது என்பது புலனாகிறது. வாக்களிக்கத் தகுதியானவர்களில் ஒருவர் பெயர் கூட விடுபடாமல் பட்டியலைத் தயாரிக்க உங்கள் அண்ணன் ஏற்பாடு செய்தால், மொத்த ஓட்டும் உங்க கட்சிக்கு தான் என்பதில், 'டவுட்'டே இல்லை!
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை: தமிழக மக்களின் ஓட்டுரிமைக்கு ஆதரவாக, அ.தி.மு.க., என்றுமே பேசியதில்லை. பா.ஜ., அரசு சொல்வதற்கெல்லாம் அடிமை சாசனம் எழுதி கொடுப்பதே அவர்களின் வாடிக்கை. சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்த பணியை ஆதரிக்கும் பழனிசாமி, ஹரியானா, மஹாராஷ்டிரா, டில்லி, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் நடந்த குளறுபடிகளை பார்க்க வேண்டும்.
டவுட் தனபாலு: அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி, உச்ச நீதிமன்றத்தில் கொடுத்த மனுவில், 'வாக்காளர் திருத்தப் பட்டியலை எதிர்க்க, தி.மு.க., முன்வைக்கும் வாதங்களில் பல ஏற்புடையதாக இல்லாமல் இருக்கலாம்; நானும் என் கருத்தைச் சொல்ல விழைகிறேன்' என்று தான் மனு போட்டிருந்தார். இந்த விபரம் உங்களுக்குத் தெரியுமா என்ற, 'டவுட்' எழுகிறதே?
பா.ம.க., நிறுவனர் ராமதாஸ்: ஏழாவது ஊதியக்குழு நிலுவைத் தொகை, முனைவர் பட்ட ஊக்கத் தொகை, பதவி உயர்வு, காலி பணி யிடங்களை நிரப்புதல், பல்கலை ஆட்சிக்குழு, கல்வி குழுக்களில் ஆசி ரியர் சங்கங்களுக்கு பிரதிநிதித்துவம், ஓய்வுகால பலன்களை உடனே வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட உரிமைகளை வலியுறுத்தி, 15 ஆண்டுகளாக, நுாற்றாண்டு கண்ட அண்ணாமலை பல்கலை ஆசிரியர்கள், ஊழியர்கள் போராடி வருகின்றனர். ஆனாலும், அவர் களின் உரிமைகள் ஒவ்வொன்றாக பறிக்கப்பட்டு வருகின்றன.
டவுட் தனபாலு: இன்னும் முழுமையாக ஐந்து மாதங்கள்... நீங்கள் என்ன காட்டு கத்து கத்தினாலும், ஆட்சியில் இருக்கும் யார் காதிலும் விழப் போவதில்லை. அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தலுக்கான வாக்குறுதிகளில், இவையும் சேர்க்கப்படும் என்பதில் மட்டும், 'டவுட்'டே இல்லை!

