PUBLISHED ON : நவ 16, 2025 12:30 AM

ஹிந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத்: தி.மு.க., உருவாக்கிய பினாமி கட்சி தான் தமிழக வெற்றிக் கழகம். தி.மு.க., கொள்கைகளை மட்டுமே பின்பற்றி வரும், த.வெ.க., தலைவர் விஜய், எதிர்காலத்தில் மற்றொரு கமலாகவே மாறுவார்.
டவுட் தனபாலு: தி.மு.க., கொள்கைகளை நகல் எடுத்தது போலதான் த.வெ.க.,வின் கொள்கைகளும் இருக்கு என்பது, 'டவுட்' இல்லாத உண்மை தான்... அதே நேரம், தி.மு.க.,வை வீழ்த்தினால் தான், தான் ஆட்சிக்கு வர முடியும் என்பதால், கமல் போல விஜய் மாற மாட்டார் என்பதிலும், 'டவுட்'டே இல்லை!
அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி: தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கிறது. நம்முடைய கட்சியை சேர்ந்த ஒவ்வொருவரும் போராளிகளாக மாறி, கட்சி பணியாற்ற வேண்டும். வியர்வை சிந்தும் அளவுக்கு தினந்தோறும் உழைக்க வேண்டும். அ.தி.மு.க.,வோடு கூட்டணிக்கு யாரும் வரவில்லை என, யாரும் பரிகாசம் செய்ய வேண்டியதில்லை. எதிர்பாராத கட்சிகளெல்லாம், அ.தி.மு.க., கூட்டணிக்கு வரப்போகின்றன. எதிர்காலத்தில் மிகப் பெரிய பொறுப்பில் நானே அமர்வேன்.
டவுட் தனபாலு: எதிர்பாராத கட்சிகள் எல்லாம்னா, பக்கத்து மாநில கட்சிகள் எல்லாம் கூட்டணிக்கு வரப்போகுதா என்ன...? 'கூட்டணிக்கு யாரும் வரலை'ன்னு உங்க கட்சியை யாரும் பரிகாசம் பண்ண மாட்டாங்க... 'மிக பெரிய பொறுப்பில் அமர்வேன்'னு நீங்க சொல்வதை தான், பலரும் பரிகாசம் பண்ணுவாங்க என்பதில், 'டவுட்'டே இல்லை!
தமிழக அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு: தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் பதவியே ஒரு இசை நாற்காலி போன்றதுதான். லோக்சபா தேர்தலுக்கு பின், அண்ணாமலைக்கு எப்படி அரோகரா சொல்லி வழி அனுப்பி வைத்தனரோ, அதேபோல, சட்டசபை தேர்தலுக்கு முன்போ அல்லது பின்போ, நாகேந்திரனுக்கும் அரோகரா போட்டு விடுவர். இது புரியாமல் நாகேந்திரன், 'தமிழகத்தில் பா.ஜ.,வை நிலை நிறுத்துவேன்' என பேசி, காமெடி செய்து கொண்டிருக்கிறார்.
டவுட் தனபாலு: ஒருகாலத்தில், ஜெ., புகழ்பாடி, தி.மு.க.,வையும், அதன் தலைவர்களையும் தாறுமாறா திட்டி தீர்த்துட்டு இருந்தீங்க... இப்ப, தி.மு.க.,வில் சேர்ந்து, முதல்வர் குடும்பத்தின் புகழ்பாடிட்டு இருக்கீங்க... அதுபோல, நாகேந்திரனும் தன் கட்சி வளர்ச்சிக்கு பாடுபடுவேன்னு சொல்லியதில் என்ன தப்பை கண்டுட்டீங்க என்ற, 'டவுட்' வருதே!

