PUBLISHED ON : நவ 19, 2025 12:00 AM

அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் சீனிவாசன்: பிரதமர் மோடியுடன் கூட்டணியில் இருக்கும் வரை, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி மீண்டும் முதல்வராவதை, எந்த கொம்பனாலும் தடுக்க முடியாது. பீஹாரில் எப்படி நிதிஷ் குமாரை முதல்வராக்கி, பிரதமர் மோடி அழகு பார்க்கிறாரோ, அதேபோல தமிழகத்திலும் பா.ஜ., கூட்டணியினர் பழனிசாமியை முதல்வராக்குவர்.
டவுட் தனபாலு: பீஹாரில் நிதிஷ் குமாரை முதல்வராக்கினாலும், துணை முதல்வர் உட்பட 10க்கும் மேற்பட்ட அமைச்சர் பதவிகளை பா.ஜ.,வுக்கு வாங்கியிருக்காங்களே... பழனிசாமியை முதல்வராக்கினா, பீஹார் பாணியில் நீங்களும் ஆட்சி அதிகாரத்தில் பங்கு தருவீங்களா என்ற, 'டவுட்' வருதே!
lll
தே.மு.தி.க., பொதுச் செயலர் பிரேமலதா: கடந்த 2011ல் மதுரை மத்தி, திருப்பரங்குன்றம் தொகுதிகளில் தே.மு.தி.க., வெற்றி பெற்றது. அதனால், நான் மதுரை மத்திய தொகுதியில் போட்டியிட வேண்டும் என, என் கட்சியினர் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். எனினும், எங்கு போட்டி என்பதை இப்போதே கூற முடியாது.
டவுட் தனபாலு: அதானே... 'வலுவான கூட்டணி அமைந்து, வெற்றி உறுதி என தெரிந்தால் மட்டுமே களமிறங்கணும்... நாம் தமிழர் கட்சி சீமான் மாதிரி வீம்புக்கு தனியா நின்று மூணாவது, நாலாவது இடத்துக்கு போயிடக்கூடாது' என்பதில் தெளிவாகவே இருக்கீங்க என்பது, 'டவுட்' இல்லாம தெரியுது!
lll
தமிழக முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம்: தமிழக காங்., தலைவர் செல்வப்பெருந்தகை, 'அ.தி.மு.க., ஆட்சி காலத்தில் மேகதாது அணை விவகாரம் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கையால், தேனாறும் பாலாறும் ஓடியதா' என கேள்வி எழுப்பி இருக்கிறார். பொறுப்புள்ள ஒரு கட்சியின் தலைவர் இப்படி பேசக்கூடாது. மற்றபடி, மேகதாது அணை விவகாரத்தை, நாங்கள் அப்போதே நிறுத்தி விட்டோம். இதை, காங்., தெரிந்துகொள்ள வேண்டும்.
டவுட் தனபாலு: மேகதாது அணை விவகாரத்தை அப்பவே நீங்க நிறுத்திட்டதா சொல்றீங்க... நிறுத்திய திட்டத்தை திரும்பவும் எப்படி செயல்படுத்த பார்க்கிறாங்க...? நீங்க உறுதியான, இறுதியான நடவடிக்கையை அப்பவே எடுத்திருந்தால், இப்ப மேகதாது அணை விவகாரம் மீண்டும் துளிர் விட்டிருக்காது என்பதில், 'டவுட்'டே இல்லை!
lll

