PUBLISHED ON : நவ 24, 2025 12:16 AM

அ.தி.மு.க., கொள்கை பரப்பு செயலர் தம்பிதுரை: தமிழகத்தில் கடந்த காலங்களில் கருணாநிதி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் கூட்டணி வைத்து தேர்தல்களை சந்தித்தனர். ஆனாலும், கூட்டணி ஆட்சி நடத்தவில்லை. பல கட்சித் தலைவர்கள், 'நாங்கள் தமிழகத்தில், கூட்டணி அமைச்சரவையில் தான் பங்கேற்போம்' என கூறுவர். அது, அவர்களது ஆசை. ஆனால், அ.தி.மு.க., தொண்டர்களும் சரி, தமிழக மக்களும் சரி, கூட்டணி அமைச்சரவையை ஒருபோதும் ஏற்க மாட்டார்கள்; தமிழகத்தில் கூட்டணி ஆட்சிக்கு வாய்ப்பில்லை.
டவுட் தனபாலு: 'நீ அவல் கொண்டு வா... நான் உமி கொண்டு வர்றேன்... ரெண்டு பேரும் ஊதி ஊதி தின்னலாம்'னு கிராமங்கள்ல கிண்டலா சொல்வாங்க... அந்த மாதிரி தான் இருக்கு, நீங்க சொல்றதும்... நீங்க பல்லக்கில் அமர, கூட்டணி கட்சிகள் சுமக்கணும் என்ற கதை, வர்ற தேர்தலில் அரங்கேறுவது, 'டவுட்' தான்!
தி.மு.க., முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி: அ.தி.மு.க., ஆட்சியில் கொள்ளையடித்த சொத்துக்களை பாதுகாக்கவே, பா.ஜ.,வுடன், அ.தி.மு.க., பொதுச் செயலர் பழனிசாமி கூட்டணி அமைத்திருக்கிறார். ஒரே ஒரு, 'ரெய்டை' மட்டும், பழனிசாமி உறவினர் வீட்டில் வருமான வரித்துறையினர் நடத்தினர். உடனே, டில்லி சென்று சமரசம் பேசி, கூட்டணி அமைத்து விட்டார்.
டவுட் தனபாலு: நீங்க, அ.தி.மு.க., அரசில் அமைச்சரா இருந்தீங்க... அப்புறம், தினகரனின், அ.ம.மு.க., வுக்கு போனீங்க... அங்கிருந்து, தி.மு.க.,வுக்கு வந்து, முக்கிய துறைகளின் அமைச்சர்களா இருந்து, இப்ப பதவி பறிபோனாலும், கட்சியில், 'பவர்புல்'லா இருக்கீங்க... 'நீங்க எந்த சொத்துக்களை பாதுகாக்க, தி.மு.க.,வுக்கு போனீங்க'ன்னு பழனிசாமி தரப்பு திருப்பி கேட்டா, தங்களிடம் பதில் இருக்கா என்ற, 'டவுட்' வருதே!
பத்திரிகை செய்தி: சமீபத்தில் கோவை வந்த பிரதமர் மோடி, அரசியல் நிலவரம் தொடர்பாக தமிழக பா.ஜ., மூத்த நிர்வாகி களிடம் சில நிமிடங்கள் பேசினார். அப்போது, 'அடுத்து தமிழக சட்ட சபை தேர்தலில் தான் முழு கவனமும் செலுத்தப்படும்; தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று, ஆட்சி அமைப்பதை நோக்கி பா.ஜ.,வினர் கடுமையாக உழைக்க வேண்டும்' என, அறிவுறுத்தினார். இதனால், தமிழக பா.ஜ., நிர்வாகிகள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
டவுட் தனபாலு: அது சரி... 'பீஹார் சட்டசபை தேர்தலில் கடைப்பிடித்த, 'பார்முலா'வே இங்கும் பின்பற்றப்படும்'னு மோடி கோடிட்டு காட்டிட்டார் என்பது, 'டவுட்' இல்லாம தெரியுது... இதனால, சோர்ந்து கிடந்த, அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி எக்ஸ்பிரஸ், இனி வேகம் எடுக்கும் என்பதிலும், 'டவுட்'டே இல்லை!

