PUBLISHED ON : நவ 26, 2025 12:00 AM

தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை: 'குடும்ப ஆட்சி வேண்டாம்' என்ற கருத்து, இந்தியா முழுதும் உள்ள மக்களிடம் இருக்கிறது; அது பீஹாரிலும் இருந்தது. பீஹாரில், 2020ல் நடந்த சட்டசபை தேர்தலில், பா.ஜ.,வை விட ஐக்கிய ஜனதா தளம் கட்சி குறைந்த எண்ணிக்கையில் எம்.எல்.ஏ.,க்களை பெற்றது. ஆனாலும், நிதிஷ் குமார் முதல்வர் ஆக்கப்பட்டார். இப்போதும் அவரே முதல்வர் ஆக்கப்பட்டுள்ளார். இதற்கு காரணம், கூட்டணி தர்மம் தான்.
டவுட் தனபாலு: கூட்டணி தர்மத்தை கட்டி காப்பாற்றுவதில், பா.ஜ.,வை அடிச்சுக்கவே முடியாது... 'தமிழகத்திலும் கூட்டணி தர்மத்தின்படி, பழனிசாமியை முதல்வராக்க பாடுபடுவோம்... பதிலுக்கு, அவரும் கூட்டணி ஆட்சிக்கு சம்மதிக்கணும்'னு சொல்லாம சொல்றீங்களோ என்ற, 'டவுட்' தான் வருது!
lll
தமிழக முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம்: முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன் உடனான சந்திப்பு அடிக்கடி நடக்கிறது; மூவரும் தினமும் பேசுகிறோம். என்னை பலவீனப்படுத்தி, தனிமைப்படுத்துவது ஒருபோதும் நடக்காது. தனிப்பட்ட முறையில், நாம் பிறக்கும்போது எந்த பதவியுடனும் பிறக்கவில்லை; அதனால், இழப்பதற்கு ஒன்றுமில்லை.
டவுட் தனபாலு: யாருமே பிறக்கும்போதே தலைவர்களா பிறப்பதில்லை தான்... தொண்டர்களா இருந்து, கடின உழைப்பு, தியாகத்தால் மட்டுமே தலைவராக முடியும் என்பதில், 'டவுட்' இல்லை... அதே நேரம், தமிழகத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி குடும்பம், தேசிய அளவில் முன்னாள் பிரதமர் நேரு குடும்பத்துக்கு இந்த விதிகள் பொருந்தாது என்பதிலும், 'டவுட்'டே இல்லை!
lll
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்: வரும் பிப்., 7ம் தேதி நடக்கும் எங்கள் கட்சி மாநாட்டில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் நடக்கிறது. புதுச்சேரியில், 28 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடுகிறோம். புதுச்சேரியில் மதுவை நம்பியே ஆட்சி உள்ளது. விஷத்தை கொடுத்து நலத் திட்டங்களை செய்கின்றனர். புதுச்சேரியில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால், படிப்படியாக மதுவை ஒழிப்போம்.
டவுட் தனபாலு: 'ஆட்சிக்கு வந்ததுமே முதல் கையெழுத்து பூரண மதுவிலக்கு'ன்னு சொல்லாம, 'படிப்படியா மதுவை ஒழிப்போம்'னு பூசி மெழுகுறீங்களே... புதுச்சேரியில் மது விற்காம, அரசை நடத்த முடியாது என்பதை நல்லாவே தெரிஞ்சு வச்சிருக்கீங்க என்பது, 'டவுட்' இல்லாம தெரியுது!
lll

