PUBLISHED ON : நவ 29, 2025 12:00 AM

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன்: எங்கள் கட்சிக்கு சட்டசபை தொகுதி வாரியாக, 234 மாவட்ட செயலர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இதற்கு, 22,000 பேர் விண்ணப்பித்த நிலையில், பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது; ஓரிரு நாட்களில் வெளியிடப்படும். ஏற்கனவே மாவட்ட செயலர்களாக உள்ள சிலரின் பதவிகள், தவிர்க்க முடியாத காரணத்தால் மாற்றப்படுகின்றன; அவர்களுக்கு வேறு பதவி ஒதுக்கப்படும். 2026 தேர்தலில், வி.சி., தவிர்க்க முடியாத கட்சி என்பதை உறுதிப்படுத்த, அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.
டவுட் தனபாலு: அவ்வளவு பெரிய, அ.தி.மு.க., - தி.மு.க.,விலேயே ரெண்டு, மூணு சட்டசபை தொகுதிக்கு ஒரு மாவட்ட செயலர்னு தான் நியமிச்சிருக்காங்க... இப்படி தொகுதிக்கு ஒரு மாவட்ட செயலரை நியமிச்சு, அவங்களை விட நான் பெரிய கட்சின்னு காட்ட நினைக்கிறீங்களா அல்லது பதவிகளை வாரி வழங்கி, உங்க கட்சியினரை திருப்திபடுத்த பார்க்கிறீங்களா என்ற, 'டவுட்'தான் வருது!
lll
தமிழக காங்., சட்டசபை குழு தலைவர் ராஜேஷ்குமார்: தமிழகத்தில், காங்கிரஸ் கட்சி ஏற்கனவே வெற்றி பெற்ற தொகுதிகள் தவிர, எந்தெந்த தொகுதிகளில் வெற்றி வாய்ப்புள்ளது என்பது பற்றிய பட்டியல் தயாரிக்கப்பட்டு வருகிறது. வரும் சட்டசபை தேர்தலில், தி.மு.க., கூட்டணியில் கூடுதல் தொகுதிகள் கேட்போம். தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்போது, அமைச்சரவையிலும் காங்கிரசுக்கு இடம் கேட்போம்.
டவுட் தனபாலு: பீஹார் சட்டசபை தேர்தலில், மரண அடி வாங்கியும் நீங்க திருந்தலையா...? இப்ப உங்க கட்சி இருக்கிற நிலைக்கு, போன தேர்தல்ல கொடுத்த தொகுதிகளை குறைக்காம இருந்தாலே, பெரிய விஷயம் என்பதில், 'டவுட்'டே இல்லை!
lll
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்: என்னிடம் பேட்டி எடுக்கும் செய்தியாளர்கள், கேள்வியை தன்மையாக கேட்க வேண்டும்; தர்க்கம் செய்யக்கூடாது. செய்தியாளர்கள் ஒரு நிறுவனத்திற்காக வேலை செய்கின்றனர். நான் கொள்கைக்காக வேலை செய்கிறேன். தவறாக கேள்வி கேட்டதாலும், நான் கூறும் பதிலை உள்வாங்காததாலும் கோபம் வருகிறது.
டவுட் தனபாலு: உங்களுக்கு கோபம் வராம கேள்வி கேட்கணும் என்றால், உங்களை நம்பி வந்த தம்பிகள் தான் கேட்கணும்... பத்திரிகையாளர்கள் பல கோணங்கள்லயும் கேள்விகள் கேட்கத்தான் செய்வாங்க... அதுக்கெல்லாம் உங்களுக்கு பதில் சொல்ல முடியாமல் தான், அவங்க மீது பாயுறீங்க என்பது, 'டவுட்' இல்லாம தெரியுது!
lll

