PUBLISHED ON : டிச 02, 2025 12:00 AM

சிவகங்கை காங்., - எம்.பி., கார்த்தி: வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் செய்ய வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால், இந்த பணிகளை முன்னதாகவே ஆரம்பித்து இருந்தால், அரசு ஊழியர்களுக்கு பணிச்சுமை இருந்திருக்காது. இப்பணியால் ஓட்டுகள் குறைய வாய்ப்பே இல்லை. இறந்தவர்கள் ஓட்டுகள் மட்டுமே நீக்கப்படுகின்றன. இந்த விஷயத்தில் என் கருத்து, தி.மு.க.,விற்கு எதிரான கருத்து இல்லை; இது சிந்தித்து கூறக்கூடிய கருத்து.
டவுட் தனபாலு: அப்படி என்றால், 'வாக்காளர் பட்டியல் திருத்தத்தை எதிர்க்கிற தி.மு.க.,வினர் சிந்திச்சு பார்க்காமல், மேம்போக்கா எதிர்க்கிறாங்க'ன்னு சொல்ல வர்றீங்களோ என்ற, 'டவுட்'தான் வருது... இப்படி எல்லாம் தி.மு.க.,வுக்கு எதிரா ஏடா கூடமாவே பேசிட்டு இருந்தா, 2029ல் உங்களுக்கு எம்.பி., 'சீட்' கிடைப்பதும், 'டவுட்'தான்!
lll
அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ஜெயகுமார்: தனக்கு அரசியல் வாழ்வு அளித்த ஜெயலலிதாவின் முதுகில் குத்திவிட்டு, கோபாலபுர கொத்தடிமைகளில் ஒருவராக திகழும் தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, முதுகில் குத்துவது பற்றி மற்றவர்களுக்கு பாடம் எடுக்கிறார். அரசியலில் அவர் உயர, ஏணிப்படியாக இருந்தவர்களை அவர் அழித்த வரலாறு அனைவருக்கும் தெரியும்.
டவுட் தனபாலு: முதுகில் குத்துவது தான், அரசியல் ராஜதந்திரம் என்று மாறி ரொம்ப காலமாகிடுச்சே... இவரது கட்சியின் பொதுச்செயலர் பழனிசாமி, யாரால், எப்படி முதல்வர் பதவிக்கு வந்தார்... அவரை பதவியில அமர்த்தியவங்க இன்று எங்க இருக்காங்கன்னு இவர் யோசனை பண்ணி பார்க்கலையோ என்ற, 'டவுட்'தான் வருது!
lll
பத்திரிகை செய்தி: அ.தி.மு.க.,வில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் சேர்ந்துள்ளார். கோபி குள்ளம்பாளையம் பண்ணை வீட்டில் தங்கியுள்ள அவரது பாதுகாப்புக்கு இரு, 'பவுன்சர்'கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். வடமாநிலத்தை சேர்ந்த பவுன்சர்கள் இருவரும், அவர் செல்லும் இடங்களுக்கெல்லாம் உடன் செல்கின்றனர். அவர்களை, த.வெ.க., தலைமை அனுப்பி வைத்துள்ளதாக கட்சியினர் தெரிவித்தனர்.
டவுட் தனபாலு: கிட்டத்தட்ட, 50 வருஷங்களா செங்கோட்டையன் அரசியல்ல இருக்கார்... தொண்டர்களோட தொண்டர்களா கலந்து பழகிட்டு இருந்தார்... இப்படி, பவுன்சர்களை அனுப்பி தொண்டர்களுக்கும், அவருக்கும் இடைவெளியை உருவாக்க பார்ப்பது சரியா என்ற, 'டவுட்' வருதே!
lll

