PUBLISHED ON : டிச 06, 2025 03:10 AM

ராஜ்யசபாவில் அ.தி.மு.க., - எம்.பி., இன்பதுரை பேச்சு: தற்போது தமிழக விவசாயிகளுக்கு மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டிருப்பது, புயலாலோ, மழை வெள்ளத்தாலோ அல்ல; தி.மு.க., அரசின் அலட்சியம் மற்றும் கவனக்குறைவால் தான். ஆயிரக்கணக்கான ஏக்கரில் பயிர்கள் மூழ்கிக் கிடக்கின்றன. சென்னை நகரமே, 2 அடி உயர தண்ணீரில் மூழ்கிக் கிடக்கிறது. இந்த நகரத்திற்கு, 4,000 கோடி ரூபாய் செலவில் மழைநீர் வடிகால் திட்டம் நிறைவேற்றப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனாலும், எங்கு பார்த்தாலும் மழை நீராக உள்ளது.
டவுட் தனபாலு: அது சரி... தமிழகத்தின் மழை பாதிப்புகளை பற்றி பார்லிமென்டில் பேசி, 'மத்திய அரசு நிவாரணம் தரணும்' என்று கேட்டிருந்தால், 'டவுட்'டே இல்லாம இவரை பாராட்டலாம்... அதை விட்டுட்டு, அங்கயும் போய், தி.மு.க., அரசு மீது குற்றஞ்சாட்டி அக்கப்போர் அரசியல் பண்றது சரியா என்ற, 'டவுட்' தான் வருது!
lll
பத்திரிகை செய்தி: தேர்தல் நெருங்குவதால், தங்கள் தொகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளுக்கு சொந்த கட்டடம் கட்டுமாறு, கூட்டுறவு சங்க அதிகாரிகளுக்கு, தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் நெருக்கடி அளித்து வருகின்றனர். கூட்டுறவு துறை அதிகாரிகளோ, 'இந்த வேகத்தை ஓராண்டிற்கு முன் காட்டியிருந்தால், சொந்த கட்டடம் கட்டியிருக்கலாம்' என, அதிருப்தி தெரிவிக்கின்றனர்.
டவுட் தனபாலு: அதானே... நாலரை வருஷங்களா கும்பகர்ணன் மாதிரி துாக்கத்துல இருந்துட்டு, இப்ப தேர்தல் வருதுன்னதும், 'ரேஷன் கடைகளுக்கு கட்டடம் கட்டுங்க'ன்னு நெருக்கடி கொடுத்தா, அதிகாரிகளும் என்ன தான் பண்ணுவாங்க...? அதேநேரம், 'நாங்க சொல்லியும், அதிகாரிகள் கேட்க மாட்டேங்கிறாங்க'ன்னு பழி போட்டு ஆளுங்கட்சியினர் தப்பிச்சிடுவாங்க என்பதில், 'டவுட்'டே இல்லை!
தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன்: கடந்த முறை பொங்கலுக்கு, ரேஷன் கார்டுதாரர்களுக்கு தி.மு.க., அரசு 1,000 ரூபாய் கூட கொடுக்கவில்லை; ஆனால், இந்த முறை, 5,000 ரூபாய் கொடுக்க போகிறதாம். இது, வரும் சட்டசபை தேர்தலுக்காக, வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுக்கும் முயற்சி.
டவுட் தனபாலு: ஒருவேளை, 5,000 ரூபாயை கொடுத்து, தி.மு.க.,வினர் மீண்டும் ஆட்சியை பிடிச்சாலும், அதை ஈடு கட்டிடுவாங்க... இருக்கவே இருக்காங்க அப்பாவி, 'குடி'மகன்கள்... மதுபானங்கள், பீர் பாட்டில்கள் விலையில் தலா, 10 ரூபாயை ஏத்தினாலே போதும்... பொங்கலுக்கு கொடுத்த பணம், தீபாவளிக்குள்ள அரசு கஜானாவுக்கு திரும்பிடும் என்பதில், 'டவுட்'டே இல்லை!

