PUBLISHED ON : டிச 10, 2025 03:13 AM

தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன்: சிலர் என்னை கடலில் தள்ளி விட்டதாக சொன்னார்கள். நான் கப்பலில் ஏறி வந்து, நடிகர் விஜயை சந்தித்தேன். தமிழகத்தை ஆட்சி செய்தவர்களே மீண்டும் மீண்டும் ஆள வேண்டுமா... மற்றவருக்கு அந்த வாய்ப்பு கிடைக்கக் கூடாதா... நல்லாட்சி அமைய, ஒரு புதிய முகத்தை தேடிக் கொண்டிருந்தோம்; கிடைத்து விட்டார். தமிழகத்தை அடுத்து ஆளப் போவது, விஜய் தான்.
டவுட் தனபாலு: உங்களது அரசியல் குருநாதர்களான, எம்.ஜி.ஆர்., - ஜெ., எல்லாம் முதல்ல, எம்.எல்.ஏ.,வாக இருந்து, படிப் படியாக வளர்ந்து தானே, முதல்வர் பதவியில் அமர்ந்தாங்க... ஆனா, இப்ப நீங்க ஏற்றுக்கொண்டுள்ள விஜய் மட்டும், அரசியலுக்கு வந்த உடனேயே, முதல்வர் 'சீட்'டில் போய் உட்காரணும்னு எதிர்பார்ப்பது முறையா என்ற, 'டவுட்' வருதே!
தமிழக ஹிந்து அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு: தமிழக, பா.ஜ.,வைச் சேர்ந்த, எச்.ராஜா பேச்சையெல்லாம், ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளக் கூடாது. அவர், தரம் தாழ்ந்த அரசியல்வாதி. அவர் களை போன்றவர்கள் அரசியலில் இருப்பது, நேர்மையான அரசியல்வாதிகளுக்கு சாபக்கேடு.
டவுட் தனபாலு: எச்.ராஜா மீது இதுவரை எந்த ஊழல் குற்றச்சாட்டும் இல்லையே... உங்க கட்சியைச் சேர்ந்த, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் நேரு மீது தான், 1,020 கோடி ரூபாய்க்கு ஊழல் குற்றச்சாட்டு எழுந்திருக்கு... இதை பார்க்கிறப்ப, உங்க கட்சியில் இருக்கிற எல்லாரும் நேர்மையானவங்களா என்ற, 'டவுட்' வருதே!
தமிழக முதல்வர் ஸ்டாலின்: தி.மு.க.,வினரின் களப்பணி மீது நம்பிக்கை வைத்து சொல்கிறேன்; அடுத்தும் ஆட்சி அமைக்கப்போவது, நமது, தி.மு.க., தான். நம் வெற்றிக்கு சாதகமான சூழ்நிலைகள் இருக்கிறது என்பதாலேயே, நம் எதிரிகள் குறுக்கு வழியில், தி.மு.க.,வை முடக்க முயல்வர். சி.பி.ஐ., அமலாக்கத்துறை, வருமான வரித் துறை என, அனைத்தையும் நம்மை நோக்கி திருப்பி விடுவர். ஏராளமான பொய்களை பரப்புவர்; ஊடகங்களை பயன்படுத்தி, பொய் செய்திகளை உலவ விடுவர். இவற்றை உறுதியுடன் எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும்.
டவுட் தனபாலு: உங்க கட்சி அமைச்சர்கள் மீதான ஊழல் புகார்களை எல்லாம், மத்திய அரசு தோண்டி, துருவ தயாராகிடுச்சு என்ற தகவல்கள் வேகமா பரவிட்டு இருக்கு... அதனால, 'எல்லாரும் ஜாக்கிரதையா இருங்க'ன்னு, இப்படி மறைமுகமா எச்சரிக்கை விடுக்குறீங்களோ என்ற, 'டவுட்' தான் வருது!

