PUBLISHED ON : டிச 11, 2025 03:18 AM

தமிழக, பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை: தமிழகத்தின் கள நிலவரம், ஆட்சியில் இருப்போரது செயல்பாடுகள், நடைமுறை பிரச்னைகள் எல்லாம் தமிழகத்தில், பா.ஜ., - அ.தி.மு.க., கூட்டணிக்கு சாதகமாக உள்ளன. மக்கள், காங்கிரசை ஒதுக்க ஆரம்பித்து விட்டனர். ஒவ்வொரு தேர்தலிலும், அதன் வெற்றி எண்ணிக்கை குறைந்து வருகிறது. தமிழகத்தில் ஒரு காலத்தில், தி.மு.க., கூட்டணியில், 63 தொகுதிகளில் போட்டியிட்ட, காங்., இப்போது, 25 'சீட்' கிடைத்தால் போதும் என்ற மனநிலையில் உள்ளது.
டவுட் தனபாலு: வாஸ்தவம் தான்... தி.மு.க., சீட்களை குறைச்சிடுமோ என்ற எண்ணத்தில் தான், நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் கட்சி பக்கம், காங்கிரஸ் பார்வையை திருப்பியிருக்கு என்பதில், 'டவுட்' இல்லை... அங்க போனா, காங்கிரஸ் கட்சிக்கு தாராளமா தொகுதிகளை, விஜய் வாரி வழங்குவார் என்பதிலும், 'டவுட்' இல்லை!
மஹாராஷ்டிராவில் செயல்படும் சிவசேனா - உத்தவ் கட்சியின், முன்னாள் அமைச்சர் ஆதித்ய தாக்கரே: மஹாராஷ்டிராவில், துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டேயின் சிவசேனாவை சேர்ந்த, 22 எம்.எல்.ஏ.,க்கள், பா.ஜ.,வைச் சேர்ந்த முதல்வர் தேவேந்திர பட்னவிசுடன் தொடர்பில் உள்ளனர். பா.ஜ.,வின் தாளத்துக்கு ஏற்ப அவர்கள் ஆடத் துவங்கி விட்டனர். நிலைமையை பார்த்தால், அவர்கள் எப்போது வேண்டுமானாலும், பா.ஜ.,வில் சேரலாம்.
டவுட் தனபாலு: உங்களிடம் இருந்து பிரிஞ்சு போனவங்க, ஏக்நாத் ஷிண்டே மீது அதிருப்தியில் இருந்தால், மீண்டும் உங்களிடம் தானே திரும்பி வரணும்... ஆனா ஆட்சி, அதிகாரத்தில் இருக்கிற, பா.ஜ., பக்கம் தானே பார்வையை திருப்புறாங்க... ஏற்கனவே, ரெண்டா உடைஞ்ச உங்க கட்சி, அடுத்து, மூணா உடைவதையும் தடுக்க முடியாது என்பதில், 'டவுட்' இல்லை!
பா.ம.க., தலைவர் அன்புமணி: பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் இருக்கும் தைலாபுரம் தோட்டத்தை, ராமதாஸ் கூடவே இருக்கும் சிலர் வாயிலாக, தி.மு.க., கைப்பற்றி விட்டது. 87 வயதான ராமதாஸ், குழந்தை போல மாறி விட்டார். தி.மு.க., கைக்கூலிகளும், துரோகி களும், தினமும் ஒரு பொய்யை சொல்லி, அவரை ஏமாற்றுகின்றனர். மனதளவில் பலவீனமாக உள்ள ராமதாசை, தங்கள் சுயநலத் திற்கு பயன்படுத்தி வருகின்றனர்.
டவுட் தனபாலு: ராமதாசுக்கும், உங்களுக்கும் இடையில் நடக்கும் அக்கப்போரில், தி.மு.க., எங்கிருந்து வந்துச்சு... பா.ஜ., - அ.தி.மு.க., கூட்டணியில் சேர முடிவு எடுத்துட்ட நீங்க, உங்க உட்கட்சி பிரச்னையில், தி.மு.க.,வை வம்புக்கு இழுத்து அரசியல் பண்றது, 'டவுட்' இல்லாம தெரியுது!

