PUBLISHED ON : டிச 12, 2025 03:38 AM

தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் பொதுச்செயலர் ஆனந்த்: புதுச்சேரியில் நடந்த விஜய் பொதுக்கூட்டத்துக்கு போலீசார், 31 நிபந்தனைகள் விதித்தனர். 'எத்தனை நிபந்தனைகள் விதித்தாலும், விஜயை பார்க்க நாங்கள் வருவோம்' என, கட்சியினர் வந்தனர். என்ன செய்தாலும், காற்றை மறைக்க முடியாது. அது போல, விஜயையும் மறைக்க முடியாது. தேர்தலுக்கு இன்னும் நான்கு மாதங்கள் உள்ளன. நம் கட்சியினர் கடுமையாக உழைத்தால், தமிழகம், புதுச்சேரி இரண்டிலும், நாம் ஆட்சியை பிடிக்கலாம்.
டவுட் தனபாலு: அது சரி... தமிழகத்தில், த.வெ.க., ஆட்சிக்கு வந்தா விஜயை முதல்வராக்கிட்டு, புதுச்சேரியிலும் உங்க கட்சி ஆட்சியை பிடிச்சிட்டா, அந்த மாநிலத்தை சேர்ந்த நீங்க முதல்வராகிடலாம்னு கனவு காண்பது, 'டவுட்' இல்லாம தெரியுது... ஆசைப்படலாம்; பேராசைப்படக் கூடாது என் பதிலும், 'டவுட்'டே இல்லை!
தமிழக, காங்., தலைவர் செல்வப்பெருந்தகை: வரும், 2026ம் ஆண்டில் நடக்க உள்ள தமிழக சட்டசபை தேர்தலில், காங்., சார்பில் போட்டியிட விரும்புவோரிடம் இருந்து, 234 சட்டசபை தொகுதிகளுக்கும் விருப்ப மனுக்கள் வரவேற்கப்படுகின்றன. விருப்ப மனு படிவங்களை, வரும், 15ம் தேதி வரை, தமிழக, காங்., தலைமை அலுவலகமான, சத்தியமூர்த்தி பவன் அல்லது மாவட்ட காங்., அலுவலகங்களில் பெற்றுக் கொள்ளலாம்.
டவுட் தனபாலு: தி.மு.க., கூட்டணியில் இருக்கும் உங்க கட்சிக்கு மிஞ்சி, மிஞ்சி போனா, 15 அல்லது, 20 தொகுதிகள் தருவாங்களா... அவற்றையும் கூட, உங்க கட்சியின் கோஷ்டி தலைவர்கள், ஆளாளுக்கு இவ்வளவு, 'சீட்'கள்னு பங்கு போட்டுக்குவீங்க... அதனால, வெட்டியா, 234 தொகுதிகளுக்கும் விருப்ப மனுக்களை வாங்கி, கட்சியினரை கஷ்டப்படுத்தணுமா என்ற, 'டவுட்' தான் வருது!
ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ: தமிழகத்தில் போதை பொருட்களால் இளைஞர், மாணவ சமுதாயத்தின் எதிர்காலம் பாழாகி விடும். தமிழகம், பஞ்சாபை போல மோசமான நிலைக்கு போய் விடும் என்பதால், அதை தடுக்க வலியுறுத்தி, திருச்சியில் ஜன., 2ல் புறப்படும், எனது சமத்துவ நடைபயணத்தை முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைக்கிறார். மதுரையில் ஜன., 12ல் பயணம் நிறைவு பெறுகிறது.
டவுட் தனபாலு: உங்க நடைபயணத்தை துவங்குறப்ப, 'நான் இந்த பயணத்தை முடிக்கிறப்ப, தமிழகத்தில், 'டாஸ்மாக்' கடைகளை எல்லாம் மூடியிருக்கணும்... இல்லை என்றால், தி.மு.க., கூட்டணியில் இருந்து வெளியேறுவேன்'னு நிபந்தனை விதிச்சு பாருங்களேன்... உங்க பலம், 'டவுட்' இல்லாம தமிழகத்துக்கு தெரிஞ்சிடும்!

