PUBLISHED ON : டிச 16, 2025 02:58 AM

தி.மு.க., அமைப்பு செயலர் ஆர்.எஸ்.பாரதி: சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியில், தமிழகத்தில் 85 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளதாக கூறுகின்றனர். வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளதாக கூறும் நிலையில், ஓட்டுச்சாவடிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு இருப்பதாக தேர்தல் கமிஷன் கூறியுள்ளது. அது எப்படி என புரியவில்லை. பீஹாரில் நடந்தது போல், தமிழகத்தில் நடக்காது. தமிழகம் ஈ.வெ.ரா., மற்றும் அண்ணாதுரை வாழ்ந்த மண். இங்கு யாரையும் ஏமாற்ற முடியாது. அப்படியே தவறு நடந்தாலும், தி.மு.க., நீதிமன்றம் சென்று நீதியை நிலைநாட்டும்.
டவுட் தனபாலு: நீதிமன்றம் போறது உங்களுக்கான உரிமை என்பதில், 'டவுட்' இல்லை... ஆனா, உங்களுக்கு சாதகமா தீர்ப்பு வந்துட்டா, 'நீதி வென்றது'ன்னு கூப்பாடு போடாமலும், பாதகமா தீர்ப்பு வந்தால், நீதிபதியை விமர்சிக்காமலும் இருப்பீங்களா என்ற, 'டவுட்' வருதே!
பா.ம.க., தலைவர் அன்புமணி: தமிழகத்தில், 'மகளிர் உரிமைத் தொகையாக, மாதம் 1,000 ரூபாய் தருவதால், பெண்கள் முன்னேறி விட்டனர்' என கூச்சமே இல்லாமல் தி.மு.க., அரசு கூறுகிறது. தி.மு.க., ஆட்சியில், மது விற்பனை வாயிலாக, மக்களின் வரிப்பணம், ஆண்டுக்கு, 1.50 லட்சம் கோடி ரூபாய் கொள்ளை அடிக்கப்படுகிறது. மதுக் கடைகளை திறந்து வைத்துவிட்டு, பெண்களுக்கான நலத்திட்டங்களை செயல்படுத்துவது என்பது, ஓட்டை வாளியில் தண்ணீர் பிடிப்பதற்கு சமம்.
டவுட் தனபாலு: வாஸ்தவம் தான்... மகளிருக்கு, 1,000 ரூபாய் தரும் பணம் எல்லாம், 'டாஸ்மாக்' வருவாயில் இருந்து தான் எடுக்கப்படுது... ஆண்களின் உயிருக்கு உலை வைக்கும் மதுவை ஆறாக ஓட விட்டுட்டு, மகளிருக்கு உரிமைத்தொகை தருவது பெரிய சாதனையா என்ற 'டவுட்' தான் வருது!
சிவகங்கை தொகுதி காங்., - எம்.பி., கார்த்தி: தமிழகத்தில் தேர்தல் வரும்போது, பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டவர்கள் அடிக்கடி வரத்தான் செய்வர். 'தமிழ் உணவு தான் பிடிக்கும்' என்பர். 'தமிழ் மொழி தான் பிடித்த மொழி' என்பர். தேர்தல் இல்லாத போது, அவர்களுக்கு தமிழகத்தை பற்றி எந்த கவனமும் இருக்காது. புலம் பெயரும் பறவைகளை போல, தேர்தல் சீசனுக்கு தமிழகம் வந்து செல்பவர்கள் தான் அவர்கள்.
டவுட் தனபாலு: இவரது தலைவர்களான சோனியா, ராகுல், பிரியங்கா எல்லாம் அடிக்கடி தமிழகம் வந்துட்டு போற மாதிரியே பேசுறாரே... அவங்களும், தேர்தல் நேரத்தில் மட்டும் தானே தமிழகத்தை எட்டி பார்க்கிறாங்க... அதனால, பா.ஜ.,வை குறை கூற இவருக்கு தார்மீக உரிமை இருக்கா என்ற, 'டவுட்' தான் வருது!

