PUBLISHED ON : டிச 23, 2025 03:37 AM

த.மா.கா., தலைவர் வாசன்: தமிழருவி மணியன் தலைமையிலான காமராஜர் மக்கள் கட்சியை, த.மா.கா.,வுடன் இணைத்துள்ளார். நம் கட்சி, 12 ஆண்டுகளாக மலர் படுக்கையில் இல்லை; முள் படுக்கையில் தான் உள்ளது. அதில் இருந்து நம் கட்சியை மீட்கவே, தமிழருவி மணியன், த.மா.கா.,வுடன் இணைந்துள்ளார். வெற்றி, தோல்வி முக்கியமல்ல; த.மா.கா.,வில் கூட்டுக் குடும்பமாக பயணிப்பதே இலக்கு.
டவுட் தனபாலு: கடந்த, 12 வருஷங்களா த.மா.கா., முள் படுக்கையில் இருந்தாலும், நீங்க மட்டும் எப்படியாவது ராஜ்யசபா எம்.பி.,யாகி சொகுசா டில்லிக்கு போயிடுறீங்களே... உங்களையே நம்பி, தன் கட்சியை இணைத்துள்ள தமிழருவி மணியனை, ஒரு கவுன்சிலர் பதவியிலாவது அமர்த்தி அழகு பார்ப்பீங்களா என்ற, 'டவுட்' வருதே!
l
தமிழக முதல்வர் ஸ்டாலின்: ஹிந்துக்கள், முஸ்லிம்கள், கிறிஸ்துவர்கள் எல்லாம் ஒரு தாய் வயிற்று பிள்ளைகளாக வாழ வேண்டும். அதற்கு கிறிஸ்துமஸ் போன்ற விழாக்கள் துணை நிற்க வேண்டும். மத சார்பின்மை, மத நல்லிணக்கத்தை விரும்பும் நாங்கள், சிறுபான்மையினருக்கு என்றும் பாதுகாப்பு அரணாக இருப்போம். தி.மு.க., ஆட்சி தான் சிறுபான்மையினருக்கு பொற்கால ஆட்சி.
டவுட் தனபாலு: இந்த மூன்று மதத்தினரையும் நீங்க, ஒரு தராசில் வைத்து தான் மதிப்பிடுறீங்களா... கிறிஸ்துமஸ், ரம்ஜான் நோன்பு திறப்பு விழாக்கள்ல கலந்துக்கிற நீங்க, தீபாவளி பண்டிகையில் மட்டும் ஏன் கலந்துக்கிறது இல்லை... அட, வாழ்த்து கூட சொல்ல மாட்டேங்கிறீங்களே... மூணு மதத்தினரையும் ஒரே மாதிரியா அணுகாத நீங்க, 'ஒரு தாய் வயிற்று பிள்ளைகளா வாழுங்க'ன்னு அறிவுரை மட்டும் சொல்லலாமா என்ற, 'டவுட்' வருதே!
பத்திரிகை செய்தி: தமிழக வெற்றிக் கழகம் கட்சியின், நாமக்கல் கிழக்கு மாவட்டச் செயலர் செந்தில்நாதன், நள்ளிரவில் அக்கட்சியின் மகளிரணி நிர்வாகி வீட்டிற்கு சென்ற வீடியோ பரவியதால், அவரது மாவட்டச் செயலர் பதவி பறிக்கப்பட்டது.
டவுட் தனபாலு: 'யோக்கியனுக்கு இருட்டுல என்ன வேலை' என்ற நடிகர் வடிவேலு காமெடி காட்சி மாதிரி இருக்கே... 'திராவிட கட்சிகளுக்கு மாற்றாக வந்திருக்கேன்'ன்னு ஊர் ஊரா நடிகர் விஜய் தம்பட்டம் அடிச்சுக்கிறாரு... அவரது கட்சியினரோ, எல்லா தில்லுமுல்லுகள்லயும் ஊறி திளைச்சவங்களா இருக்காங்களே... தப்பி தவறி விஜய் ஆட்சிக்கு வந்தாலும், இந்த மாதிரி ஆட்களை வச்சுக்கிட்டு எப்படி நல்லாட்சி தர முடியும் என்ற, 'டவுட்' வருதே!

