PUBLISHED ON : டிச 30, 2025 03:08 AM

நடிகரும், தமிழக பா.ஜ., மூத்த தலைவருமான சரத்குமார்: த.வெ.க., தலைவர் விஜய் காரை மறித்து போராட்டம் நடத்திய, அக்கட்சியின் பெண் நிர்வாகி, தற்கொலைக்கு முயன்றுள்ளார். தன் காரை மறித்தபோது, மனிதாபிமான அடிப்படையில் கீழே இறங்கி இரண்டு வார்த்தைகள் விஜய் பேசி இருந்தாலே, பிரச்னை முடிந்திருக்கும். சொந்த கட்சி நிர்வாகிகளின் கருத்துகளை கேட்பவர் தான் நாயகனாகவும், கட்சி தலைவராகவும் இருக்க முடியும்.
டவுட் தனபாலு: நீங்களும் கூடத்தான், சமத்துவ மக்கள் கட்சியை நடத்தினீங்க... நடுராத்திரியில் தண்ணீர் குடிக்க எழுந்தப்ப, உங்க மனைவி ராதிகாவிடம் கருத்து கேட்டு, காலையில, பா.ஜ.,வுடன் உங்க கட்சியை இணைக்கலையா... அப்ப, கட்சி நிர்வாகிகள், தொண்டர்களிடம் கருத்து கேட்கணும்னு உங்களுக்கு ஏன் தோணலை என்ற, 'டவுட்' வருதே!
பத்திரிகை செய்தி: 'தமிழக வெற்றிக் கழகம் கட்சி கூட்டணியில் இணைவதற்கு, தினகரனின் அ.ம.மு.க., 30 சீட்களும், பன்னீர்செல்வத்தின் அ.தி.மு.க., தொண்டர்கள் உரிமை மீட்பு கழகம், 10 சீட்களும் கேட்கின்றன. அத்துடன், தேர்தல் செலவுக்கும் கணிசமான தொகை கேட்கின்றனர். இதனால், விஜய் கடும் குழப்பத்தில் உள்ளார். இந்த விஷயத்தில் பன்னீரும், தினகரனும் இறங்கி வரும் பட்சத்தில், கூட்டணி இறுதியாகும்' என, த.வெ.க., வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
டவுட் தனபாலு: தினகரன், பன்னீர்செல்வத்திடம் இல்லாத பணமா... இருந்தாலும், வெற்றி உறுதின்னு தெரியாம, வேட்பாளர்களுக்கு கைக்காசை செலவழித்து நஷ்டப்பட வேண்டாம்னு நினைச்சி தான், விஜய் கட்சியிடம் சீட்களுடன், ரூபாய் நோட்டுகளையும் சேர்த்து கேட்கிறாங்களோ என்ற, 'டவுட்' தான் வருது!
பா.ம.க., நிறுவனர் ராமதாஸ்:
நான் செய்த தவறுகளில் ஒன்று, என் மகன் அன்புமணியை எம்.பி.,யாக்கியது. ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல, அன்புமணியின் ராஜ்யசபா வருகை, 30 சதவீதம் மட்டுமே. ராஜ்யசபா விவாதங்களில் ஏழு முறை மட்டுமே பேசியுள்ளார். எம்.பி., பதவியை வீணடித்தது போலவே, கட்சி தலைவரான பின், சரியாக களப் பணியாற்றவில்லை. ஒரு காலத்தில், 20 எம்.எல்.ஏ.,க்கள் இருந்த, பா.ம.க., இன்று அங்கீகாரத்தையே இழந்துள்ளது.
டவுட் தனபாலு: இது, காலம் கடந்த ஞானோதயம்... என்ன தான் வாரிசு அரசியல் என்ற குற்றச்சாட்டு, தி.மு.க., மீது இருந்தாலும், களப்பணியில் கருணாநிதி, ஸ்டாலின், ஏன், இப்ப இருக்கிற உதயநிதி வரை, யாரையும் குறைச்சி மதிப்பிட முடியாது... அந்த வகையில், தி.மு.க.,விடம் நீங்க பாடம் கத்துக்கணும் என்பதில், 'டவுட்'டே இல்லை!

