PUBLISHED ON : ஜன 02, 2026 02:09 AM

தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன்: தி.மு.க., அரசு பொறுப்பேற்ற பின், போதைப்பொருள் நடமாட்டம் இல்லாத மாநிலமாக தமிழகம் மாற்றப்பட்டுள்ளது. போதைப்பொருள் குறித்து குற்றச்சாட்டு சொல்லும் எதிர்க்கட்சி தலைவர்கள், எங்கு விற்கிறது என்பதை கூறினால், கூறியவர்களின் பெயர்களை ரகசியமாக பாதுகாத்து, கஞ்சா விற்பனையில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுப்போம்.
டவுட் தனபாலு: பள்ளியில் படிக்கிற பசங்களுக்கே கஞ்சா சாக்லேட்டுகள், தங்கு தடையில்லாம கிடைக்குதே... திருத்தணியில், வடமாநில வாலிபரை அரிவாளால் வெட்டியவங்க, கஞ்சா போதையில் இருந்தாங்க என்பது உறுதியான பிறகும், நீங்க இப்படி சொல்வது, முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் கதை என்பதில், 'டவுட்'டே இல்லை!
அன்புமணி அணியின், பா.ம.க., - எம்.எல்.ஏ., சதாசிவம்: பா.ம.க.,வை பிளவுபடுத்த, தி.மு.க., பணம் கொடுத்துள்ளது. குறிப்பாக சிங்கப்பூரில், ராமதாஸ் தரப்புக்கு, 110 கோடி ரூபாய் கை மாறியிருக்கிறது. தி.மு.க.,விடம் வாங்கிய பணத்துக்கு கணக்கு காட்ட வேண்டும் என்பதற்காக, சேலத்தில் ராமதாஸ் கூட்டிய பொதுக்குழு, செயற்குழு கூட்டங்கள் செல்லாது.
டவுட் தனபாலு: பா.ம.க.,வில், தந்தைக்கும், மகனுக்கும் நடக்கிற தகராறில், கொள்கை வேறுபாடுகள் எல்லாம் இல்லை... எல்லாமே கோடிகள் சார்ந்தது தான் என்பதில், 'டவுட்'டே இல்லை... ராமதாஸ் தரப்புக்கு தி.மு.க., 110 கோடி தந்தது என்றால், அன்புமணி தரப்புக்கு அ.தி.மு.க., எத்தனை கோடிகள் கொடுத்திருக்கும் என்ற, 'டவுட்'டும் கூடவே எழுதே!
மா.கம்யூ., மாநில செயலர் சண்முகம்: 'சம வேலைக்கு சம ஊதியம்' என, தி.மு.க., அளித்த வாக்குறுதியை நிறைவேற்றாததால், பெண்கள் உள்ளிட்ட இடைநிலை ஆசிரியர்கள், சில நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களை அழைத்து பேசி போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்கு பதிலாக, காவல் துறையை கொண்டு அடக்குவது வன்மையான கண்டனத்துக்குரியது. காவல் துறை, வருவாய் துறை, அரசு அதிகாரிகளில் ஒரு பிரிவினர், தி.மு.க., ஆட்சிக்கு எதிராக இருப்பரோ என்ற சந்தேகம் ஏற்படுகிறது.
டவுட் தனபாலு: அது சரி... யார், எதுக்கு போராட்டம் நடத்தினாலும், அதை ஆதரிக்கணும் என்பது, கம்யூ.,க்களின் மரபணுவிலேயே ஊறி போயிருக்கு... ஆனாலும், தி.மு.க., தலைமை மனம் நோகக் கூடாது என்பதால், அதிகாரிகள் மீது பழிபோடுறீங்க... 'தடியும் முறியக்கூடாது; பாம்பும் சாகணும்' என்ற உங்க நோக்கம், 'டவுட்'டே இல்லாம விளங்குது!

