PUBLISHED ON : ஜன 04, 2026 02:49 AM

தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர்: 'கடன் வாங்குவதில் தமிழகம் முதலிடம்' என, அ.தி.மு.க., பொதுச் செயலர் பழனிசாமி கூறியுள்ளார். அவரது காலத்திலும், அவருக்கு முந்தைய ஜெயலலிதா ஆட்சியிலும் கடன்கள் வாங்கப்பட்டுள்ளன. ஒரு மாநிலத்தின் சக்தி எந்த அளவு உள்ளது, எவ்வளவு கடன் வாங்கலாம் என, மத்திய அரசு குறியீடு வெளியிட்டுள்ளது. நாம் அந்த குறியீட்டுக்கு குறைவாகத்தான் கடன் வாங்கியுள்ளோம்.
டவுட் தனபாலு: நீங்க, பல லட்சம் கோடி ரூபாய் வாங்குற கடனுக்கு கட்டும் பல ஆயிரம் கோடி ரூபாய் வட்டியையும், மக்களின் வரிப்பணத்தில் இருந்து தானே கொடுக்கணும்... இதனால, மக்களுக்கு தான் கூடுதல் சுமை என்பதை யோசிக்க மாட்டீங்களா என்ற, 'டவுட்' வருதே!
தமிழக முதல்வர் ஸ்டாலின்: ஆளுங்கட்சி நிம்மதியாக, தன் பணிகளை கவனிப்பதும், எதிர்க்கட்சி களத்தில் நின்று போராடுவதும்தான், அரசியலின் இயல்பு. ஆனால், தமிழகத்தில் எதிர்க்கட்சியான அ.தி.மு.க.,வோ, பா.ஜ.,விடம் சரணாகதி அடைந்து, சாய்ந்து கிடக்கிறது. ஆளுங்கட்சியான தி.மு.க., தான், தமிழகத்தை வஞ்சிக்கும் மத்திய அரசுடன் தொடர்ந்து உறுதியாக போராடிக் கொண்டிருக்கிறது.
டவுட் தனபாலு: 'மத்திய அரசிடம் போராடியும், அவங்க பெருசா கவனிக்க மாட்டேங்கிறாங்களே... அதனால, உங்க போராட்டத்துக்கு ஓய்வு கொடுத்துட்டு, பா.ஜ., - அ.தி.மு.க., கூட்டணிக்கு ஓட்டு போட்டால், தமிழகத்துக்கு மத்திய அரசு நிறைய திட்டங்களை கொண்டு வருமே'ன்னு மக்கள் நினைச்சிட்டா, உங்க வெற்றி கேள்விக்குறியாகிடும் என்பதில், 'டவுட்'டே இல்லை!
பத்திரிகை செய்தி: தமிழக காங்கிரஸ் சார்பில், சட்டசபை தேர்தலில் போட்டியிட விரும்புவோரிடம் இருந்து விருப்ப மனுக்கள், கடந்த டிச., 10ம் தேதியில் இருந்து, சென்னை சத்தியமூர்த்தி பவனிலும், மாவட்ட காங்., அலுவலகங்களிலும் வழங்கப்பட்டு வருகின்றன. இதுவரை, 4,000க்கும் மேற்பட்ட விருப்ப மனுக்கள் பெறப்பட்டுள்ளன. ஜன., 15ம் தேதி வரை விருப்ப மனுக்கள் பெறப்படும் என தமிழக காங்., தலைமை அறிவித்துள்ளது.
டவுட் தனபாலு: தி.மு.க., - அ.தி.மு.க.,வில் எல்லாம், சென்னையில் கட்சி தலைமை அலுவலகத்தில் தான் விருப்ப மனுக்கள் தரணும்... அதுக்கும், 10,000 முதல் 25,000 ரூபாய் வரை கட்டணமும் உண்டு... ஆனா, காங்கிரசில் உள்ளூர்லயே மனுக்கள் தரலாம்... கட்டணமும் இல்லை என்பதால் தான், இத்தனை ஆயிரம் விண்ணப்பங்கள் குவிஞ்சிருக்கு... ஒரு மனுவுக்கு, 10,000 ரூபாய் கட்டணம்னு அறிவிச்சா, 100 பேராவது மனு போடுவாங்களா என்பது, 'டவுட்'தான்!

