PUBLISHED ON : ஜன 12, 2026 01:47 AM

தமிழக சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன்: அனைத்து திட்டங்கள் வாயிலாகவும் மக்கள் பயனடைந்து வருவதால், அடுத்தும் தி.மு.க., ஆட்சி தான். எங்கள் ஆட்சியில், '4 லட்சம் கோடி ரூபாய் ஊழல்' என, எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி கூறியுள்ளார். அவர் என்ன கணக்கு போட்டு, 4 லட்சம் கோடி ரூபாய் என கூறுகிறார் என்று தெரியவில்லை.
டவுட் தனபாலு: இவங்க சொல்றதை பார்த்தால், 4 லட்சம் கோடி ரூபாய்க்கு மேலேயே ஊழல் நடந்திருக்குமோ... எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமிக்கு சரியா கணக்கு போடத் தெரியலையோ என ஏகப்பட்ட, 'டவுட்'கள் எழுதே!
தமிழக பா.ஜ., தலைமை செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி: தி.மு.க., அரசு பொறுப்பேற்றது முதல், 4,000 கோவில்களில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு உள்ளதாக முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். அரசுக்கும், கோவில் கும்பாபிஷேகத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை. பக்தர்களின் நன்கொடை, காணிக்கையால் கும்பாபிஷேகம் நடத்தப்படுகிறது. கும்பாபிஷேகம் நடத்த, 1 ரூபாய் கூட அரசு செலவழிப்பதில்லை. 'தி.மு.க., ஆட்சியில், 7,701 கோடி ரூபாய் மதிப்பிலான 7,655 ஏக்கர் கோவில் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன' என்றும் முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். காக்கா உட்கார பனம் பழம் விழுந்த கதை தான் இது. நீதிமன்ற தீர்ப்பு அடிப்படையில் தான் சொத்துக்கள் மீட்கப்பட்டுள்ளன.
டவுட் தனபாலு: சரி விடுங்க... நாட்டில், ஏதாவது ஒரு மாநகராட்சி தேர்தலில் பா.ஜ., ஜெயிச்சாலும், 'மோடியின் நல்லாட்சிக்கு கிடைத்த வெற்றி'ன்னு நீங்க பெருமை அடிச்சுக்கிறது இல்லையா... அந்த மாதிரி தான் தி.மு.க.,வினரும் சொல்லிக்கிறாங்க என்பதில், 'டவுட்'டே இல்லை!
ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ: அமைதி பூங்காவாக இருக்கும் தமிழகத்தில், ஹிந்துத்துவா சக்திகள் பிரிவினைவாதத்தை ஏற்படுத்த முயற்சிக்கின்றன. வியர்வை, ரத்தம் சிந்தி முன்னாள் முதல்வர்கள் அண்ணாதுரை, கருணாநிதி கட்டிக் காத்த திராவிட கோட்டை தமிழகம். ம.தி.மு.க., சார்பில் ஆட்சியில் பங்கு; அதிகாரத்தில் பங்கு என்று தப்பித்தவறி ஒரு சொல் கூட பேசியது கிடையாது. நேற்று வரையிலும் இந்த கோரிக்கையை வைக்கவில்லை; இனியும் வைக்க மாட்டோம்.
டவுட் தனபாலு: நீங்க ஆட்சியில் பங்கு கேட்டுட்டாலும், தங்க தாம்பாளத்தில் வச்சு தந்துட்டு தான் தி.மு.க.,வினர் மறுவேலை பார்ப்பாங்க... இத்தனை வருஷ அரசியல் அனுபவத்தில், உங்க கட்சியின் பலத்தை நீங்க நல்லாவே தெரிஞ்சி வச்சிருக்கீங்க என் பது, 'டவுட்' இல்லாம தெரியுது!

