PUBLISHED ON : ஜன 24, 2026 12:00 AM

பன்னீர்செல்வம் அணியில் இருந்து விலகி தி.மு.க.,வில் இணைந்துள்ள, முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம்: கூட்டணி தொடர்பாக எந்த முடிவும் எடுக்காத பன்னீர்செல்வத்தை நம்பி, அரசியல் செய்தது தவறாக போய் விட்டது. அதனாலேயே, தி.மு.க.,வில் இணைந்துள்ளேன். எல்லாருடைய தேவைகளையும் பூர்த்தி செய்து, மக்கள் மனதில் முதல்வர் ஸ்டாலின் இடம் பெற்றுள்ளார். தமிழக முன்னேற்றத்திற்காக தி.மு.க., பாடுபடுகிறது. இதையெல்லாம் வைத்து தி.மு.க.,வில் இணைந்தேன்.
டவுட் தனபாலு: 'எல்லாருடைய தேவையையும் முதல்வர் பூர்த்தி பண்ணியிருக்கார்'னு சொல்றீங்களே... தி.மு.க.,வில் இணைய உங்களது தேவை என்னவா இருந்தது, அதை எந்த வகையில் தி.மு.க.,வினர் பூர்த்தி செய்தாங்கன்னு ஏகப்பட்ட, 'டவுட்'கள் எழுதே!
---
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்: கட்டுக்கடங்காத போதைப்பொருள் புழக்கத்தால், தமிழகத்தில் நாள்தோறும் நடக்கும் வன்முறை வெறியாட்டங்கள் அச்சத்தை ஏற்படுத்துகின்றன. தமிழகத்தை கஞ்சா போதையில் தள்ளாட வைத்தது தான், தி.மு.க.,வின் சாதனையாக உள்ளது. இனியாவது இளைஞர்களின் எதிர்காலத்தை பாதுகாக்க, கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களை ஒழிக்க ஆக்கப்பூர்வ நடவடிக்கையை அரசு எடுக்க வேண்டும்.
டவுட் தனபாலு: நாலே முக்கால் வருஷ ஆட்சியில் எடுக்காத நடவடிக்கையை, மீதமிருக்கும் மூணு மாத ஆட்சியில் மட்டும் எடுத்துடுவாங்களா என்ன...? அதனால, அடுத்து வரும் புதிய ஆட்சி தான் நடவடிக்கை எடுக்கணும்... 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடும் உங்களுக்கு அந்த வாய்ப்பு கிடைக்குமா என்பது, 'டவுட்'தான்!
---
அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன்: தமிழகத்தில், தே.ஜ., கூட்டணியை பலப்படுத்த வேண்டும் என்ற பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் முயற்சிக்கு உறுதுணையாக இருக்க முடிவு செய்துள்ளோம். விட்டுக் கொடுத்து போகிறவர்கள், கெட்டுப் போவதில்லை. என்னதான் இருந்தாலும், அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமிக்கும், எங்களுக்கும் இருப்பது பங்காளி சண்டை தான். மீண்டும் ஜெயலலிதா ஆட்சி வர வேண்டும் என்பதற்காக, தே.ஜ., கூட்டணிக்கு திரும்பி உள்ளோம்.
டவுட் தனபாலு: 'துரோகி பழனிசாமியை வீழ்த்தும் வரை ஓய மாட்டேன்'னு வீராவேசமா பேட்டிகள் குடுத்துட்டு, அப்படியே, 'யூ டர்ன்' அடிச்சிட்டீங்களே... அரசியலில் வெட்கம், மானம், ரோஷம் எல்லாம் பார்த்தா, வேலைக்கு ஆகாது என்பதை, 'டவுட்'டே இல்லாம நிரூபிச்சிட்டீங்க!

