PUBLISHED ON : ஜன 30, 2026 03:33 AM

புதிய தமிழகம் கட்சி நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி: ஆட்சி யிலும், அதிகாரத்திலும் பங்கு தரும் கட்சியுடன் தான் கூட்டணி என்பதில், நாங்கள் உறுதியாக இருக்கிறோம். கடந்த காலங்களில் பல கட்சிகளுக்கான வெற்றி வாய்ப்பை, நாங்கள் உருவாக்கிக் கொடுத்திருக்கிறோம். நாங்கள் இடம்பெறும் கூட்டணியே நிச்சயம் வெற்றி பெறும். எந்தக் கட்சியுடன் கூட்டணி என்பதை, பிப்., 15ம் தேதிக்குள் அறிவிப்போம்.
டவுட் தனபாலு: நீங்க இடம்பெறும் கூட்டணி தான் வெற்றி பெறும் என்றால், தி.மு.க.,வும், அ.தி.மு.க.,வும் இந்நேரம் உங்க வீட்டு வாசல்ல தவம் கிடக்கணுமே... அப்படி எந்த அறிகுறியும் கண்ணுக்கு எட்டிய துாரம் வரையில் தெரியலையே... உங்களது, 'ஓவர் பில்டப்'புக்கு தேர்தல் முடிவில் விடை கிடைச்சிடும் என்பதில், 'டவுட்'டே இல்லை!
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன்: ஹிந்தியை தாய்மொழியாக கொண்டவர்கள் தான், எப்போதுமே பிரதமராக வர முடிகிறது. வடக்கே ஆதிக்கம் செலுத்த முடிகிறது; டில்லியில் ஆட்சி அதிகாரத்தில் அமர முடிகிறது. அவர்கள் வைப்பது தான் சட்டம் என்ற நிலை இன்றும் தொடரும் சூழலில், நாம் எல்லோரும் ஹிந்தி படித்திருந்தால், மோடி வித்தைக்கு நாமும் மயங்கி இருப்போம்.
டவுட் தனபாலு: ஹிந்தி தெரிஞ்சவங்க தான் பிரதமராக வர முடியும்னு சொல்றீங்களே... உங்க வாதப்படியே பார்த்தாலும், நாமும் ஹிந்தி படிச்சிருந்தா, தமிழருக்கும் என்றைக்கோ பிரதமர் பதவி தேடி வந்திருக்கும் என்ற கோணத்தை நீங்க யோசிக்கலையா என்ற, 'டவுட்' வருதே!
தமிழக முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம்: கூட்டணிக்கு வருமாறு, அ.ம.மு.க., பொதுச் செயலர் தினகரன் உட்பட யாருமே என்னை இதுவரை கூப்பிடவில்லை. என் ஒற்றை வேண்டு கோள் என்னவென்றால், பிரிந்து கிடக்கும் அ.தி.மு.க.,வின் அனைத்து சக்திகளும் ஒன்றிணைய வேண்டும் என்பதுதான். அதுதான் என் தலையாய கோரிக்கை. ஆனால், அனைவரும் மீண்டும் ஒன்றிணைய வாய்ப்புள்ளதா என்பது, ஆண்டவனுக்கு தான் தெரியும்.
டவுட் தனபாலு: பிரிஞ்சு கிடந்த எல்லாரும் ஒன்றுகூடிட்டாங்க... நீங்க மட்டும் தான் வெளியில நிற்கிறீங்க... பழனிசாமி தரப்பு உங்களை எல்லாம் அரவணைக்கும் என்ற எதிர்பார்ப்பு பொய்த்து போயிட்டதால் தான், ஆண்டவன் மீது பாரத்தை போட்டுட்டு நழுவுறீங்களோ என்ற, 'டவுட்' தான் வருது!

