PUBLISHED ON : ஏப் 12, 2026 02:04 AM

தி.மு.க., அமைப்பு செயலர் ஆர்.எஸ்.பாரதி: முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கோடநாடு பங்களாவில், பழனிசாமியின் ஆட்சிக் காலத்தில், காவலாளியை கொலை செய்து, கோடிக்கணக்கான சொத்துக்களும், பணமும், நகைகளும் கொள்ளை அடிக்கப்பட்டன. அந்த கொலை பற்றி விசாரணை நடக்கிறது. எப்படி சாத்தான்குளம் வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட அத்தனை பேருக்கும் துாக்கு தண்டனை கிடைத்ததோ, அதேபோல் கோடநாடு வழக்கிலும் தீர்ப்பு வரும்; தண்டனையும் கிடைக்கும்.
டவுட் தனபாலு: 'கோடநாடு வழக்கில் சம்பந்தப்பட்டவர்களை கண்டிப்பாக தண்டிப்பேன்'னு, 2021 சட்டசபை தேர்தல் நேரத்தில் உங்க தலைவர் ஸ்டாலின் ஆவேசமாக முழங்கினார்... அஞ்சு வருஷமா அந்த வழக்கை முடிக்க எந்த நடவடிக்கையும் எடுத்த மாதிரி தெரியலையே... தேர்தல் நேரத்தில் மட்டும் அந்த வழக்கை ஊறுகாய் மாதிரி பயன்படுத்துறீங்களோ என்ற, 'டவுட்'தான் வருது!
lll
காங்., கட்சியை சேர்ந்த, கர்நாடக துணை முதல்வர் சிவகுமார்: த.வெ.க., தலைவர் விஜய்க்கு, அரசியல் முதிர்ச்சி என்றால் என்னவென்றே தெரியாது. விஜய், தன்னுடன் இருப்பதாக கூறுவது, தமிழ் மாநில காங்கிரசாக இருக்கலாம் என கருதுகிறேன். விஜயுடன் காங்., இல்லை; தி.மு.க.,வுடன் தான் கூட்டணி வைத்துள்ளது.
டவுட் தனபாலு: பக்கத்துல இருக்கிற புதுச்சேரிக்கு வந்த உங்க தலைவர் ராகுல், அதே ஊரில் இருந்த முதல்வர் ஸ்டாலினுடன் சேர்ந்து பிரசாரம் செய்யாமலே போயிட்டாரே... அதனால, உடைஞ்ச கண்ணாடியை ஒட்டுறது மாதிரி, 'தி.மு.க.,வுடன் தான் நாங்க இருக்கோம்'னு நீங்க சொல்வதை உங்க கட்சி தொண்டர்களே நம்புவாங்களா என்பது, 'டவுட்'தான்!
lll
பத்திரிகை செய்தி: தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதுார் தொகுதியில், தி.மு.க., சார்பில் உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி செழியன், அ.தி.மு.க., சார்பில், முன்னாள் எம்.எல்.ஏ., இளமதி போட்டியிடுகின்றனர். கடும் வெயிலில் பிரசாரம் செய்த இளமதி திடீரென மயங்கி விழுந்து, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையறிந்த, அமைச்சர் கோவி செழியன், மயிலாடுதுறை காங்., - எம்.பி., சுதா உள்ளிட்டோர், தங்கள் பிரசாரத்தை பாதியில் நிறுத்திவிட்டு, மருத்துவமனைக்கு சென்று, இளமதியிடம் உடல்நலம் விசாரித்தனர்.
டவுட் தனபாலு: அடடா... இதுதான் அரசியல் பண்பாடு... 'மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு' என கூறிய அண்ணாதுரையின் வழிவந்த இவங்க கட்சிகளின் தலைவர்கள், இவங்களிடம் இந்த அரசியல் நாகரிகத்தை கத்துக்கணும் என்பதில், 'டவுட்'டே இல்லை!
lll

