PUBLISHED ON : ஏப் 22, 2026 12:31 AM

மா.கம்யூ., மாநில செயலர் சண்முகம்: மகாத்மா காந்தி பெயரில் தொடங்கப்பட்ட, 100 நாள் வேலை உறுதியளிப்பு திட்டத்தை ஒழிக்கும் முயற்சி நடக்கிறது. இத்திட்டத்துக்கு மத்திய அரசு சரியாக நிதி ஒதுக்குவதும் இல்லை. மாநில அரசு கேட்டால், 'மத்திய அரசு 60 சதவீதம் மட்டுமே நிதி வழங்கும். 40 சதவீதம் நிதியை மாநில அரசு ஒதுக்க வேண்டும்' என்று திசை திருப்புகின்றனர்.
டவுட் தனபாலு: கிராமப்புற மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கணும் என்ற நல்ல நோக்கத்தில் கொண்டு வரப்பட்டது தான், மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டம்... ஆனா, அந்த திட்டத்தில், வேலையே செய்யாம கூலி வாங்குறது, கூடுதல் வேலையாட்களை கணக்கு காட்டுறது என, ஏகப்பட்ட மோசடிகள் நடப்பது இவரது கண்களுக்கு தெரியலையா என்ற, 'டவுட்' தான் வருது!
தி.மு.க., துணை பொதுச் செயலர் கனிமொழி: அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமிக்கு தேர்தல் பயத்தில் ஜுரம் வந்து விட்டதால் என்னென்னமோ பேசுகிறார். தமிழகத்திற்கு துரோகம் செய்து கொண்டிருக்கிற பழனிசாமியை பற்றி பேசுவது வீண். அவர் பா.ஜ., குரலாக பேசி வருகிறார். பெண்களை ஏமாற்றும் பா.ஜ.,வையும், பழனிசாமியையும் தேர்தலில் ஓட ஓட விரட்ட வேண்டும்.
டவுட் தனபாலு: மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவுக்கு பழனிசாமி ஆதரவு தந்தாரே... உங்க கட்சி தான், அந்த மசோதாவை நிறைவேற்ற விடாம தடுத்துடுச்சு... தி.மு.க.,வில் உதயநிதிக்கு கிடைக்கும் மரியாதையும், கவுரவமும், அவரை விட சீனியரான, பெண்மணியான உங்களுக்கு கிடைக்குதா என்பதை, 'டவுட்' இல்லாம சொல்ல முடியுமா?
த.வெ.க., நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன்: என் கோபிசெட்டிபாளையம் தொகுதியில் பிரசாரம் செய்த அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி, என்னை விமர்சித்து பேசியுள்ளார். அடுத்தவர் விமர்சனம் குறித்தெல்லாம் கவலைப்பட்டு, அரசியலில் முடங்கிவிட முடியாது. ஆனால், பழனிசாமியின் விமர்சனங்கள் கடுமையாக இருப்பதாக என்னிடம் சிலர் குறிப்பிட்டனர். மக்கள் என்னை நம்புகின்றனர். காய்க்கிற மரம் தான் கல்லடி படும். அதற்கேற்ப பழனிசாமி விமர்சனத்தை எதிர்கொள்வேன்.
டவுட் தனபாலு: அரசியலுக்கு வந்தால், விமர்சனங்களை எதிர்கொண்டு தான் ஆகணும் என்பதில், 'டவுட்' இல்லை... ஆனாலும், அரசியலில் உங்களை விட ஜூனியரான பழனிசாமியிடம், 'பாட்டு' வாங்க வேண்டியிருக்கேன்னு நீங்க கவலைப்படுவதும், 'டவுட்' இல்லாம தெரியுது!

