PUBLISHED ON : ஏப் 24, 2026 12:58 AM

த.வெ.க., தலைவர் விஜய்: சிறுபான்மையினர் ஓட்டுகளை பெற, ஒரு பக்கம் காங்கிரசுடன் கூட்டு வைத்து, தி.மு.க., கதர் வேஷம் போடுகிறது; மறுபக்கம், பா.ஜ.,வுடன் மறைமுக கூட்டணி அமைத்து, காவி வேஷம் போடுகிறது. தி.மு.க.,வுக்கும், பா.ஜ.,வுக்கும், ரகசிய தொடர்பு உள்ளது என, இரண்டு ஆண்டுகளுக்கு முன் நான் சொன்னது, இன்று இந்தியா முழுக்க எதிரொலிக்கிறது. மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியும் இதை இப்போது சொல்கிறார்.
டவுட் தனபாலு: டில்லியில் சட்டசபை தேர்தல் நடந்தப்ப, ஆம் ஆத்மி கட்சி தலைவர்கள் வீடுகளில் மத்திய விசாரணை அமைப்புகள் பல அதிரடி சோதனைகளை நடத்துச்சு... இப்ப, மேற்கு வங்கத்திலும் பல சோதனைகள் நடந்துச்சு... ஆனா, தி.மு.க., தலைவர்களிடம் எந்த சோதனைகளும் நடக்கலையே... இதை எல்லாம் கூட்டி கழிச்சு பார்த்தா, நீங்க சொல்றது உண்மைதானோ என்ற, 'டவுட்' தான் வருது!
lll
தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை: கோவை தெற்கு தொகுதியில், தி.மு.க., வேட்பாளர் செந்தில் பாலாஜிக்காக, கரூரில் இருந்து வந்தவர்கள் பணப் பட்டுவாடா செய்தனர். அவர்களை பிடித்து, கோவை, ராமநாதபுரம் போலீஸ் நிலையத்தில் வைத்த போது, 500 பேர் கும்பல் போலீஸ் நிலையத்தை சுற்றி வளைத்தது. போலீஸ் நிலையத்தை பூட்டி, உள்ளே யாரும் வராதபடி போலீசார் தங்களை பாதுகாத்துக் கொண்டனர்.
டவுட் தனபாலு: செந்தில் பாலாஜி, கோவை தெற்கில் போட்டியிட்டாலும், பணப் பட்டுவாடாவுக்கு தன் சொந்த ஊரில் இருந்து தான் ஆட்களை இறக்கியிருக்காரு... கோவை மாவட்ட நிர்வாகிகளை நம்பி பணத்தை ஒப்படைத்தால், 'ஆட்டை' போட்டுருவாங்க என பயந்துட்டாரோ என்ற, 'டவுட்' தான் வருது!
lll
தமிழக முதல்வர் ஸ்டாலின்: தற்போது தேர்தல் அறிக்கையில் அளித்துள்ள, 500க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளில், 'இல்லத்தரசி' திட்டம் முக்கியமானது. தி.மு.க., மீண்டும் ஆட்சிக்கு வந்ததும், 8,000 ரூபாய் கூப்பன் வழங்கப்படும். நான் மீண்டும் முதல்வர் ஆனதும், இந்த திட்டத்திற்கு தான் முதல் கையெழுத்து போடுவேன். இந்த திட்டங்களை எல்லாம் செயல்படுத்தி விட்டு, 2031 தேர்தலில் மீண்டும் ஓட்டு கேட்டு வருவேன்.
டவுட் தனபாலு: போன, 2021 சட்டசபை தேர்தலில் தந்த வாக்குறுதிகளில் பலவற்றை நிறைவேற்றாமலே, 2026 சட்டசபை தேர்தலுக்கு வந்துட்டீங்க... அதனால, இப்ப தந்திருக்கிற, 500க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளை நீங்க நிறைவேற்றுவீங்கன்னு நம்பி வாக்காளர்கள் ஓட்டு போட்டிருப்பாங்களா என்பது, 'டவுட்' தான்!
lll

