PUBLISHED ON : மே 17, 2026 12:00 AM

தி.மு.க., தலைவர் ஸ்டாலின்: நம் தேர்தல் தோல்விக்கு ஒருவர், இன்னொருவரை குற்றம் சொல்கிறார். அவர், இன்னொருவரை கைகாட்டுகிறார். இப்படி மாற்றி மாற்றி குற்றம் சொல்லிக் கொண்டே இருந்தால், ஒரு முடிவே இருக்காது. அப்படியென்றால், இதற்கு யார் தான் பொறுப்பு? யாரும், யாரையும் குறை சொல்ல வேண்டாம். தலைவர் என்ற முறையில் நானே இந்த தோல்விக்கு பொறுப்பேற்கிறேன்; அதுதான் நியாயம்.
டவுட் தனபாலு: 'வெற்றிக்கு காரணம் நான்தான்'னு சொல்றப்ப, தோல்விக்கும் அதே பொறுப்பை ஏற்கிற உங்க பக்குவத்தை, 'டவுட்' இல்லாம பாராட்டலாம்... வழக்கமா தோல்விக்கு பொறுப்பு ஏற்கிறவங்க, தங்களது பதவியை ராஜினாமா பண்ணிடுவாங்களே... உங்களிடம் அப்படி எந்த ஐடியாவும் இல்லையோ என்ற, 'டவுட்'டும் கூடவே எழுது!
lll
அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் சண்முகம்: அ.தி.மு.க., தலைமை அலுவலகத்திற்கு, நாங்கள் வரப் போவதாகவும், அதனால், அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வந்துள்ளன. சாதாரணமான எங்களுக்கு, எம்.பி., - எம்.எல்.ஏ., அமைச்சர் என பதவிகளை கொடுத்த அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தை, நாங்கள் கோவிலாக மதித்து வருகிறோம். எந்த நிலையிலும், எந்த காரணத்திற்காகவும், எங்கள் கோவிலான தலைமை அலுவலகத்திற்கு, எங்களால் சிறு பாதிப்பும் ஏற்படாது.
டவுட் தனபாலு: கட்சி அலுவலகம் கோவில் என்றால், கட்சி கட்டுப்பாடு என்பது, தெய்வத்துக்கு நிகரானது... ஆனா, கட்சி கட்டுப்பாட்டை காற்றில் பறக்க விட்டுட்டு, ஆளாளுக்கு ஒரு முடிவு எடுத்து, ஒருத்தர் மீது ஒருத்தர் குற்றம்சாட்டிட்டு இருப்பதை, உங்களை எல்லாம் உருவாக்கிய ஜெயலலிதாவின் ஆன்மா மன்னிக்குமா என்பது, 'டவுட்'தான்!
lll
பத்திரிகை செய்தி: தமிழகத்தில் ஆட்சி மாற்றத்துக்கு பின் ஏற்பட்டுள்ள அரசியல் நிகழ்வுகள் குறித்து, தமிழக பா.ஜ., மூத்த நிர்வாகிகளிடம், பா.ஜ., தேசிய அமைப்பு பொதுச்செயலர் பி.எல்.சந்தோஷ் கேட்டறிந்தார். அ.தி.மு.க.,வில் பொதுச்செயலர் பழனிசாமி அணி, முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி -- சண்முகம் அணி என, இரு குழுக்களாக செயல்படுவது குறித்தும், அவர்களின் விவகாரம் குறித்தும் பா.ஜ., நிர்வாகிகள் எந்த கருத்தும் தெரிவிக்கக் கூடாது என கூறியுள்ளார்.
டவுட் தனபாலு: 'அ.தி.மு.க.,வின் இரு அணிகளுக்கு மத்தியில் நடக்கும் மோதலின் பின்னணியில் இருப்பதே பா.ஜ.,தான்'னு சிலர் வதந்திகளை பரப்பி விடுறாங்களே... பா.ஜ.,வினரின் மவுனத்தை பார்த்தா, அது உண்மைதானோ என்ற, 'டவுட்'தான் வருது!
lll
