PUBLISHED ON : ஜூன் 15, 2026 12:14 AM

ம.தி.மு.க., முதன்மை செயலர் துரை வைகோ: ஒரு கூட்டணியில் நீடிப்பது, வெளியேறுவது, தனித்து போட்டியிடுவது என்பது அந்தந்த கட்சிகளின் சொந்த விருப்பம். ம.தி.மு.க.,வை பொறுத்தவரை, வரும் 27ம் தேதி நடக்கும் கட்சியின் பொதுக்குழுவில், தி.மு.க., உடனான கூட்டணி குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும்.
டவுட் தனபாலு: நீங்க மற்றும் உங்க தந்தை வைகோவின் சமீபகால செயல்பாடுகளை பார்க்கும்போது, தி.மு.க., கூட்டணிக்கு, 'டாட்டா' காட்ட முடிவு பண்ணிட்டீங்க என்பது, 'டவுட்' இல்லாம தெரியுது... அதே நேரம், 'ஜனநாயக முறைப்படி முடிவு எடுத்தோம்'னு காட்டிக்கிறதுக்காக, சம்பிரதாயத்துக்கு பொதுக்குழுவை கூட்டப் போறீங்க என்பதிலும், 'டவுட்'டே இல்லை!
அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி: ஒவ்வொரு ஆண்டும் கோடையில் மின் தேவை அதிகரிப்பது எல்லாருக்கும் தெரியும். ஆனால், முன்கூட்டியே திட்டமிடல் நடக்கவில்லை. அமைச்சர் நிர்மல் குமாரோ, 'பியூஸ் கேரியர் திருட்டு' என்று விளக்கம் அளிக்கிறார். தமிழகம் முழுதும் ஒரே நேரத்தில், பியூஸ் கேரியர் திருட்டு போனதா? கடந்த தி.மு.க., ஆட்சியின் நீட்சியாகவே, இந்த பொய்க்கால் குதிரை அரசு இருக்கிறது.
டவுட் தனபாலு: மின் தேவைக்கு ஏற்ப உற்பத்தியை பெருக்கும் அளவுக்கு முன்கூட்டியே திட்டமிடல் இல்லை என்பது சரிதான்... ஆனா, முன்கூட்டியே திட்டமிடுவதை கோட்டை விட்டதில் முந்தைய தி.மு.க., அரசுக்கும், அதற்கு முன், 10 ஆண்டுகள் தமிழகத்தை ஆட்சி செய்த உங்க கட்சிக்கும் அதிக பங்கிருக்கு என்பதில், 'டவுட்'டே இல்லை!
அ.ம.மு.க., பொதுச் செயலர் தினகரன்: ஜெயலலிதா ஆட்சியை கொண்டு வருவதற்காக, எங்களுக்குள் இருந்த மன வருத்தங்களை மறந்து சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க., கூட்டணியில் இணைந்து போட்டியிட்டோம். கூட்டணி தர்மப்படி தேர்தலுக்கு பின்னரும், தே.ஜ., கூட்டணியில் உள்ளோம். 'அ.தி.மு.க., - அ.ம.மு.க., இணைய வேண்டும்; அதற்கு இதுதான் சரியான நேரம்' என பலர் கூறினாலும், கட்சி நிர்வாகிகள் இது குறித்து என்னிடம் பேசவில்லை. அ.ம.மு.க., என்றைக்கும் தனித்துவமான இயக்கமாக தொடர்ந்து செயல்படும்.
டவுட் தனபாலு: உங்க கட்சியில் நிர்வாகிகள்னு யாராவது இருந்தால் தானே உங்களிடம் பேசுவாங்க... 'ஒன் மேன் ஆர்மி' மாதிரி கட்சி நடத்திட்டு இருக்கும் நீங்களே விரும்பினா கூட, உங்க கட்சியை அ.தி.மு.க.,வில் பழனிசாமி சேர்த்துக்குவாரா என்பது, 'டவுட்'தான்!
