PUBLISHED ON : ஜூலை 10, 2026 12:00 AM

சிவகங்கை காங்., - எம்.பி., கார்த்தி: அ.தி.மு.க., என்ற கட்சி இருக்க வேண்டும். மக்களின் உணர்வுகளை புரிந்து கொள்ளும் கட்சி அழிவது, எனக்கு சரியாக படவில்லை. சட்டசபையில் ஆளுங்கட்சி கூட்டணிக்கு பெரும்பான்மை இருக்கும்போது, அ.தி.மு.க.,வில் ஊழல் செய்தவர்களை, த.வெ.க.,வில் இணைக்க தேவையில்லை. ஆனால், என் பேச்சை என் கட்சியினரே கேட்க மாட்டார்கள்; மற்ற கட்சியின ர் எப்படி கேட்பர்?
டவுட் தனபாலு: எப்பவும் ஏடாகூடமாவே கருத்து சொல்லிட்டு இருந்தா, உங்களை யாராவது ஏத்துக்குவாங்களா...? சரியோ, தப்போ தலைமை எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுறவங்க தான் உண்மையான விசுவாசி... அப்படி இருந்ததால் தான், உங்களை விட ஜூனியரான மாணிக்கம் தாகூர், இன்று உங்க கட்சிக்கு மாநில தலைவராகி இருக்கார் என்பதில், 'டவுட்'டே இல்லை!
---
ஸ்ரீவைகுண்டம் தொகுதி த.வெ.க., - எம்.எல்.ஏ., சரவணன்: தி.மு.க., முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் உதவியாளர்கள் என சிலர் வந்து, 'எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்து விட்டு, தி.மு.க.,வில் சேர வேண்டும்' என்று என்னிடம் தெரிவித்தனர். சென்னையில் எம்.எல்.ஏ., விடுதியில் என்னை சந்தித்து, '50 கோடி ரூபாய் தருகிறோம்' என்று பேரம் பேசியதோடு, 'சம்மதிக்காவிட்டால் உங்களை என்ன செய்வோம் என்றே தெரியாது' என மிரட்டினர்.
டவுட் தனபாலு: ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.,வையே மிரட்டும் அளவுக்கு, தி.மு.க.,வினர் இன்னும் அதிகார மமதையில் இருக்காங்களா அல்லது அந்த அளவுக்கு நீங்க, 'வீக்'கா இருக்கீங்களா என்ற, 'டவுட்' தான் வருது... அதே நேரம், இப்படி எல்லாம் குற்றஞ்சாட்டினா, உங்க கட்சி தலைமையின் பார்வை பட்டு, அமைச்சர் பதவி ஏதும் கிடைக்கும்னு, 'அடிச்சு' விடுறீங்களோ என்ற, 'டவுட்'டும் சேர்ந்தே வருது!
---
வி.சி.க., தலைவர் திருமாவளவன்: 'தி.மு.க., கூட்டணியில் வி.சி.க., இல்லை' என, அந்த கட்சி தான் கூறியது. கூட்டணியில் இருந்து நாங்களாக வெளியேறவில்லை. நான், த.வெ.க., கூட்டணியில் இருப்பதாகவும் அறிவிக்கவில்லை. இனி, த.வெ.க., தலைமையில் கூட்டணி உறுதியானால், அக்கூட்டணியில் இடம்பெறுவோம்.
டவுட் தனபாலு: த.வெ.க., கூட்டணி அரசில், உங்க கட்சியின் சார்பில் வன்னியரசு அமைச்சரா இருக்காரு... ஆனாலும், அந்த கூட்டணியில் இல்லைன்னு சொல்லி குழப்புறீங்களே... 'கூழுக்கும் ஆசை; மீசைக்கும் ஆசை' என்ற பழமொழிக்கு சரியான உதாரணம் நீங்க தான் என்பதில், 'டவுட்'டே இல்லை!
