PUBLISHED ON : ஜூலை 12, 2026 12:30 AM

காங்., தமிழக மூத்த தலைவர் கே.எஸ்.அழகிரி: ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க.,வுடன் காங்., கூட்டணியில் இருந்தபோது, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர்கள் ஊழல் வழக்கில் தண்டனை பெற்றனர்; அப்போது, காங்கிரஸ் எதிர்க்கவில்லை. ஊழல் வழக்கில் சிக்கிய முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, தி.மு.க.,வில் சேர்க்கப்பட்டார்; அந்த நேரத்திலும் காங்கிரஸ் எதிர்க்கவில்லை. அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தற்போது த.வெ.க.,வில் சேர்ந்திருப்பதை நாம் விமர்சிக்கக் கூடாது; அது, கூட்டணி தர்மத்திற்கு அழகல்ல.
டவுட் தனபாலு: அது சரி... 'கூட்டணிக்கு தலைமை வகிக்கும் கட்சி, நியாயம், தர்மத்துக்கு விரோதமா எந்த காரியத்தை செஞ்சாலும், அதுக்கு ஒத்து ஊதுவது தான் கூட்டணி தர்மம்'னு சொல்லாம சொல்றீங்களோ என்ற, 'டவுட்' தான் வருது!
தி.மு.க., துணை பொதுச்செயலர் கனிமொழி: கடந்த மாதம், '9.91 டி.எம்.சி., காவிரி நீரை தமிழகத்திற்கு திறந்து விட வேண்டும்' என்ற காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் வழிகாட்டுதலை, கர்நாடக காங்கிரஸ் அரசு மீறியுள்ளது. எனவே, த.வெ.க., அரசும், அமைச்சரவையில் பங்கு கொண்டிருக்கும் காங்கிரஸ் அமைச்சர்களும், தமிழகத்திற்கான காவிரி நீர் பங்கீட்டை பெற்று தருவதை உறுதி செய்ய வேண்டும்.
டவுட் தனபாலு: கடந்த காலங்களிலும் காவிரி தண்ணீரை தர மறுத்து கர்நாடக அரசு முரண்டு பிடிச்சது... அப்ப தி.மு.க., அரசும், தமிழக காங்கிரசாரும், கர்நாடக காங்., அரசிடம் சாமர்த்தியமா பேசி தண்ணீரை வாங்கிய மாதிரியும், இப்ப அந்த மாதிரி செய்ய மாட்டேங்கிறாங்க என்பது போலவும் குற்றஞ்சாட்டுவது சரியா என்ற, 'டவுட்' வருதே!
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்: தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகே ஐந்தாங்கட்டளையில், அரசு நுகர்பொருள் வாணிப கழகத்தின் திறந்தவெளி நெல் சேமிப்பு கிடங்கில் தீப்பற்றி, 27,000க்கும் அதிகமான நெல் மூட்டைகள் எரிந்து சேதமடைந்தது அதிர்ச்சி தருகிறது. உணவு தானியங்களை கூட ஒரு அரசால் பாதுகாக்க முடியாதென்றால், அது அரசா, இல்லை தரிசா என்ற கேள்வி எழுகிறது.
டவுட் தனபாலு: ஆட்சி மாற்றம் நடந்து ரெண்டு மாசம் தானே ஆகுது... அதுக்குள்ள ஆகாயத்தை வில்லா வளைச்சுட முடியுமா...? த.வெ.க.,வால், தமிழகத்தில் எல்லா கட்சிகளும் பாதிக்கப்பட்டிருந்தாலும், அதிக சேதாரம் என்னமோ உங்க கட்சிக்கு தான்... அந்த கடுப்பு உங்க குற்றச்சாட்டில் வெளிப்படுது என்பதில், 'டவுட்'டே இல்லை!
