PUBLISHED ON : ஜூலை 24, 2026 12:17 AM

காங்., தமிழக மூத்த தலைவர் கே.எஸ்.அழகிரி: நாங்கள் சொல்லும் திருத்தங்களை கொண்டு வந்தால், தொகுதி மறுவரையறை மசோதாவை ஆதரிப்பதாக தி.மு.க., கூறுவது துரதிர்ஷ்டவசமானது. காங்கிரசோடு கூட்டணியில் இருந்தால் பா.ஜ.,வை எதிர்ப்பது, கூட்டணி இல்லையென்றால் பா.ஜ.,வை ஆதரிப்பது என்பது, தி.மு.க.,வின் சந்தர்ப்பவாத அரசியல். பா.ஜ.,வை தி.மு.க., ஆதரித்தால், தமிழகம் மன்னிக்காது.
டவுட் தனபாலு: அது சரி... கிட்டத்தட்ட, 20 வருஷங்களா கூட்டணியில் இருந்துட்டு, தேர்தலையும் தி.மு.க., கூட்டணியில் சந்திச்சிட்டு, ஓட்டு எண்ணிக்கை முடிஞ்ச மறுநாளே, த.வெ.க., கூட்டணிக்கு உங்க கட்சி தாவியது மட்டும், சந்தர்ப்பவாத அரசியல் இல்லையா என்ற, 'டவுட்' வருதே!
தமிழக மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் விக்னேஷ்: 'டாஸ்மாக்' மதுக்கடைகளின் முன், தற்போது குப்பைகள் குவிந்து கிடப்பதோடு, கடை முன் சிலர் படுத்து உறங்குவதும் நடக்கிறது. இதை சரி செய்ய, டாஸ்மாக் மதுக்கடைக்கு பதில், 'ரெஸ்டோ பார்' அனுமதியை தனியாருக்கு கொடுப்பது, முழுதுமாக டாஸ்மாக் கடைகளை அகற்றுவது என்ற ஆலோசனைகள் உள்ளன. கூடிய விரைவில், இந்த பிரச்னைக்கு தீர்வு காணப்படும்.
டவுட் தனபாலு: டாஸ்மாக் கடைகள் முன், யாரும் நிம்மதியா துாங்கி ஓய்வு எடுக்கலை... போதை தலைக்கேறி, மயங்கி கிடக்கிறாங்க என்பது தான், 'டவுட்' இல்லாத உண்மை... மதுக்கடைகளை தனியார் வசம் கொடுத்துட்டா, இந்த மாதிரி அலங்கோலங்கள் எல்லாம் இருக்காது என்பதிலும், 'டவுட்'டே இல்லை!
ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ: எனக்கு பிறந்த நாள் விழா எடுப்பதை, நான் முற்றிலும் விரும்பவில்லை. இந்த ஆண்டு மட்டுமல்ல, நான் வாழும் காலம் வரையிலும் என் பிறந்த நாள் விழாவை, ம.தி.மு.க., தொண்டர்கள் நடத்தக்கூடாது என்பதை திட்டவட்டமாக தெரிவிக்கிறேன். என் பிறந்த நாளன்று, யாரும் என்னை சந்திக்க முற்பட வேண்டாம். அந்த நாளில், எங்காவது பிறர் அறியா வண்ணம் அமைதியாக இருக்க விரும்புகிறேன்.
டவுட் தனபாலு: எந்த ஆண்டும் இல்லாம, இந்த வருஷம் மட்டும் ஏன் இப்படி திடீர்னு அறிவிக்கிறீங்க... கட்சியின் முன்னணி பிரமுகர்கள் மட்டுமில்லாம, இரண்டு எம்.எல்.ஏ.,க்களும் தி.மு.க., பக்கம் போயிட்டாங்க... 'உங்க பிறந்த நாளை கொண்டாடக் கூட கட்சியினர் யாரும் இல்லை'ன்னு செய்திகள் வந்துடக் கூடாதுன்னு முந்திக்கிட்டீங்களோ என்ற, 'டவுட்' தான் வருது!
