PUBLISHED ON : ஆக 15, 2026 12:57 AM

உத்தர பிரதேச மாநிலத்தில் செயல்படும், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி: நாட்டின் இளைஞர்கள் மீது காங்கிரசுக்கும் அக்கறை இல்லை; பா.ஜ.,வுக்கும் அக்கறை இல்லை. இரு கட்சிகளும், அரசியல் சுயலாபத்துக்காக இளைஞர்களை தவறாக வழிநடத்துகின்றன. எனவே, இந்த கட்சிகளின் சூழ்ச்சி வலையில் இளைஞர்கள் சிக்கக்கூடாது. இந்த கட்சிகளிடம் அவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
டவுட் தனபாலு: முன்னொரு காலத்தில், உ.பி.,யில் தனி செல்வாக்குடன் முதல்வராக இருந்தீங்க... இப்ப, உங்க கட்சிக்கு அங்க ஒரு எம்.எல்.ஏ., கூட இல்லை... உங்க கட்சியில இருந்தவங்க எல்லாம் எங்க போனாங்கன்னு சுயபரிசோதனை பண்ணிட்டு, அப்புறமா மாற்று கட்சிகளை பற்றி குறை சொன்னால் என்ன என்ற, 'டவுட்' எழுதே!
பத்திரிகை செய்தி: 'சட்டசபையில் விவாதிக்கப்படும் விஷயங்களை மட்டும் மையமாக வைத்து பேசுங்கள்; அதை விட்டுவிட்டு, தேவையின்றி எதுவும் பேசாதீர்கள்' என, தி.மு.க., -- எம்.எல்.ஏ.,க்களுக்கு, அக்கட்சித் தலைவர் ஸ்டாலின் கண்டிப்புடன் அறிவுரை வழங்கியுள்ளார்.
டவுட் தனபாலு: தி.மு.க., சார்பில், ஆறேழு முறை எம்.எல்.ஏ.,க்களா ஜெயித்த மூத்த தலைவர்கள் பலர் இருக்கும்போது, ரெண்டாவது முறையா எம்.எல்.ஏ.,வாகி இருக்கும் உதயநிதியை, எதிர்க்கட்சித் தலைவரா நியமித்தால் இப்படித்தான் நடக்கும்... மூத்த தலைவர்களை முன்னிலைப்படுத்தினால் மட்டுமே, அடுத்த ஐந்து வருஷத்துக்கு ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக தி.மு.க., இருக்கும் என்பதில், 'டவுட்'டே இல்லை!
lஇந்திய கம்யூ., மத்திய கட்டுப்பாட்டு குழு உறுப்பினர் முத்தரசன்: எங்கள் கட்சி சார்பில், நாடு தழுவிய மக்கள் சந்திப்பு நடைபயண பிரசார இயக்கம் துவங்கியுள்ளது. இந்தியாவில் மாற்றத்தை உருவாக்க, பா.ஜ.,வை வீழ்த்தவே இந்த பிரசார இயக்கம் நடக்கிறது.
டவுட் தனபாலு: நாட்டுக்கு சுதந்திரம் வாங்கி தந்து, 50 வருஷங்களுக்கும் மேலாக நாட்டை ஆட்சி செய்த காங்கிரசாலேயே, கடந்த 12 வருஷங்களா பா.ஜ.,வை வீழ்த்த முடியலையே... அதனால, 'பா.ஜ.,வை வீழ்த்தப் போறோம்'னு, நீங்க சொல்றதை, உங்க கட்சித் தொண்டர்களே நம்புவாங்களா என்பது, 'டவுட்'தான்!
