PUBLISHED ON : செப் 05, 2026 12:34 AM

காங்.,கட்சியைச் சேர்ந்த, புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி: தமிழக முதல்வர் விஜயை பிரதமர் வேட்பாளராக பார்ப்பது அவரது கட்சியினரின் உணர்வு. 'இண்டி' கூட்டணியில் ராகுல் தான் பிரதமர் வேட்பாளர்; அதை விஜய் ஏற்றுக்கொள்வார். தமிழக அமைச்சரவையில் இருந்து வெளியேறுவோம் என, காங்., அமைச்சர் கூறியிருப்பது, அவரது எண்ணத்தின் வெளிப்பாடு. த.வெ.க.,வுடன் கூட்டணியில் இருப்பதால் நாங்கள் ஒன்றும் அடிமை இல்லை.
டவுட் தனபாலு: வாராது வந்த மாமணி போல, தமிழகத்தில் 59 வருஷங்களுக்கு பிறகு காங்கிரசுக்கு அமைச்சரவையில் பங்கு கிடைச்சிருக்கு... கிடைக்கவே கிடைக்க வாய்ப்பில்லாத பிரதமர் பதவிக்காக, தேவையில்லாம அடிச்சுக்கிட்டு அமைச்சர் பதவிகளை உங்க கட்சியினர் இழந்துடுவாங்களோ என்ற, 'டவுட்' தான் வருது!
தி.மு.க., தலைவர் ஸ்டாலின்: நம் கட்சியில், மறுசீரமைப்பு பணி முடிந்த பின், உறுப்பினர் சேர்க்கையை தொடங்க வேண்டும். வேர்கள் வலிமையாக இருந்தால் தான், ஆலமரம் உறுதி யாக நிற்கும். நம் கட்டமைப்பு தான் நம்மை தாங்கி நிற்கும் ஆணி வேர். அதை பலப்படுத்தும் பொறுப்பு, நிர்வாகிகளான உங் களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது . கட்சியை மறுசீரமைப்போம்; மீண்டும் வெல்வோம்.
டவுட் தனபாலு: ஆட்சியில் இருக்கும்போது, வேர்களுக்கு முறையா தண்ணீர் ஊற்றி பராமரிச்சிருந்தால், இப்ப எதிர்க்கட்சி வரிசைக்கு வந்திருக்கணுமா...? ஆட்சியில் இருந்தப்ப மேல்மட்ட தலைவர்கள் மட்டுமே, 'வளமா' இருந்துட்டு, அடிமட்ட தொண்டர் களை கண்டுக்காம விட்டது தான், உங்களது தோல்விக்கு முழுமுதற் காரணம் என்பதில், 'டவுட்'டே இல்லை!
பா.ஜ., தமிழக தலைவர் நயினார் நாகேந்திரன்: காங்கிரசாரும், த.வெ.க.,வினரும் பிரதமர் பதவி தங்களுக்கு தான் என இப்போதே அடித்து கொள்கின்றனர். பதவியை ராஜினாமா செய்ய போவதாக காங்., அமைச்சர் மிரட்டுகிறார். இவர்கள் எப்படி தமிழக மக்களுக்கு நல்லது செய்ய போகின்றனர்?
டவுட் தனபாலு: பிரதமர் மோடிக்கு நிகரா எந்த தலைவர்களும் இல்லாததால, உங்களது தேசிய ஜனநாயக கூட்டணியில் எந்த பிரச்னையும் இல்லை... ஆனா காங்கிரசின், 'இண்டி' கூட்டணியில் இருக்கிற 10க்கும் மேற்பட்ட தலைவர்களுக்கு பிரதமர் பதவி மீது ஒரு கண் இருக்கே... இப்ப, அதுல விஜயும் சேர்ந்துட்டார்... அதேநேரம், இவங்க எல்லாரும் பிரதமர் வேட்பாளர் பதவிக்கு அடிச்சுக்கிறதை பார்த்தால், ஆண்டிகள் சேர்ந்து மடம் கட்டிய கதை தான் நினைவுக்கு வருது என்பதில், 'டவுட்'டே இல்லை!
