PUBLISHED ON : நவ 08, 2024 12:00 AM

'நம் பொதுச்செயலர் பிரியங்கா ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்...' என, கவலைப்படுகின்றனர், கேரளாவைச் சேர்ந்த காங்கிரஸ் தொண்டர்கள்.
இங்கு, மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த முதல்வர்பினராயி விஜயன் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணிஆட்சி நடக்கிறது. கடந்தலோக்சபா தேர்தலில், இங்குள்ள வயநாடு மற்றும் உத்தர பிரதேச மாநிலம், ரேபரேலி ஆகிய தொகுதிகளில் காங்கிரஸ் சார்பில் ராகுல் போட்டியிட்டார்.
இரண்டு தொகுதி களிலும் வெற்றி பெற்றதால், வயநாடு எம்.பி., பதவியை ராஜினாமா செய்தார். வரும் 13ல் அங்கு இடைத்தேர்தல் நடக்கவுள்ளது; இதில் காங்கிரஸ் சார்பில் ராகுலின் தங்கை பிரியங்கா போட்டியிடுகிறார்.
வயநாடு முழுதும் தீவிரமாக பிரசாரம் செய்து வருகிறார், பிரியங்கா. அவர் செல்லுமிடம் எல்லாம் கூட்டம் கட்டுக்கடங்காமல் கூடுகிறது; குறிப்பாக, பெண்கள் கூட்டம் அதிக அளவில் திரள்கிறது.
இதைப் பார்த்த கேரள மாநில காங்கிரஸ் நிர்வாகிகள் சிலர், 'ராகுல் பிரசாரம் செய்யும்போது கூட இவ்வளவு கூட்டம் கூடியது இல்லை. உங்களுக்குதான் அதிக கூட்டம் கூடுகிறது...' என, பிரியங்காவுக்கு, 'ஐஸ்' வைத்தனர்.
இதை கேள்விப்பட்ட காங்கிரஸ் தொண்டர்கள், 'பங்காளி சண்டையால், நம் நாட்டில் பல கட்சிகள் உடைந்து சிதறியுள்ளன. சுயநலம் பிடித்த நிர்வாகிகளை, பிரியங்கா விரட்டியடிக்காவிட்டால் நம்கட்சிக்கும் அந்த நிலை வந்துவிடும்...' என, புலம்புகின்றனர்.