/
தினம் தினம்
/
டவுட் தனபாலு
/
சிவகங்கை காங்., - எம்.பி., கார்த்தி சிதம்பரம்:
/
சிவகங்கை காங்., - எம்.பி., கார்த்தி சிதம்பரம்:
PUBLISHED ON : ஏப் 14, 2024 12:00 AM

சிவகங்கை காங்., - எம்.பி., கார்த்தி சிதம்பரம்: கூட்டணி பலத்தில் தான் வெற்றி பெறுகிறேன் என்று சொல்வதில் எனக்கு தயக்கமோ, கூச்சமோ கிடையாது. நான் பலமுறை சொல்லியிருக்கிறேன், லோக்சபா தேர்தலில் வேட்பாளரை விட கூட்டணி, கட்சி, சின்னம் தான் நிற்கும். இதுவரை அ.தி.மு.க., -- தி.மு.க., கூட்டணியை தவிர்த்து விட்டு தமிழகத்தில் யாரும் வெற்றி பெற்றதாக என் வாழ்நாளில் பார்க்கவில்லை.
டவுட் தனபாலு: சிவகங்கையில் உங்க அப்பா ஏழு முறையும், நீங்க ஒரு முறையும் ஜெயிச்சது திராவிட கட்சிகளின் கூட்டணியால் தான் என்பதை மறைக்காம ஒத்துக் கொண்டதற்கு நன்றி... அதனால, உங்க கட்சியினர் அடிக்கடி பேசும், 'காமராஜர் ஆட்சி' என்பது கானல் நீர் தான் என்பதில், 'டவுட்'டே இல்லை!
தமிழக பா.ஜ., விவசாய அணி தலைவர் ஜி.கே.நாகராஜ்: கோவையில் போட்டியிடும் மாநில தலைவர் அண்ணாமலைக்கு, தொகுதி மக்களிடம் நாளுக்கு நாள் ஆதரவு பெருகிறது. இதை பொறுத்துக்கொள்ள முடியாத தி.மு.க.,வினர், பா.ஜ.,வினர் கலவரம் செய்ய முயலுவதாகக் கூறி, எங்கள் கட்சியினர் மீது பொய் புகார் அளித்துள்ளனர்.
டவுட் தனபாலு: 'அண்ணாமலை எல்லாம் எங்களுக்கு ஒரு பொருட்டே இல்லை'ன்னு ஜம்பம் அடிக்கிற தி.மு.க.,வினர், அவரைக் கண்டு அஞ்சுவது தெளிவா தெரியுது... அதனால தான், புகார் மேல புகார் கொடுக்கிறாங்க... ஆனா, இதெல்லாம் அண்ணாமலைக்கு கூடுதல் விளம்பரத்தை தான் தரும் என்பதில், 'டவுட்'டே இல்லை!
பா.ம.க., தலைவர் அன்புமணி: காங்., கட்சியை சேர்ந்த, கர்நாடக முதல்வர் சித்தராமையா, 'மத்தியில் இண்டியா கூட்டணி ஆட்சி அமைத்தால், காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டப்படும்' என்று, கூறியுள்ளார். இதற்கு, 'இண்டியா' கூட்டணியில் இருக்கும் முதல்வர் ஸ்டாலின், எதிர்ப்போ, கண்டனமோ தெரிவிக்கவில்லை. காங்கிரசின் நலன்களுக்காக, காவிரியில் தமிழகத்தின் உரிமைகளை தாரைவார்க்க துணிந்து விட்டார்.
டவுட் தனபாலு: தி.மு.க., தேர்தல் அறிக்கையில, 'மேகதாது அணை திட்டத்தை வர விட மாட்டோம்'னு வாக்குறுதி தந்திருந்தாங்க... அதுக்கு பதிலடியா சித்தராமையா, 'அணை கட்டப்படும்'னு சொல்றாரு... இதெல்லாம் தேர்தல் களத்துல, அரசியல் கட்சிகள் தர்ற நிறைவேற்றப்படாத வாக்குறுதிகள் என்பதில், 'டவுட்'டே இல்லை!

