PUBLISHED ON : நவ 24, 2024 12:00 AM

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்: எங்கள் கட்சியில் இருந்து நிர்வாகிகள் பலரும் விலகுவது குறித்து கேட்கின்றனர். அவர்களை மாற்றுக் கட்சிக்கு அனுப்பி வைத்திருப்பதே, நாங்கள்தான். வெவ்வேறு இயக்கங்களுக்கு சென்று, எங்களுக்காக உளவு பார்த்து தகவல் சொல்வர். அதாவது எங்களுடைய, 'ஸ்லீப்பர் செல்'கள்.
டவுட் தனபாலு: அதுசரி... அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரனும் இப்படித்தான், 'ஸ்லீப்பர் செல்'னு பேசி பேசி, கடைசியில் அவரே, 'ஸ்லீப் மோடு'க்கு போயிட்டாரு... இப்ப, நீங்களும் ஆரம்பிச்சுட்டீங்களா... எங்களுக்கு என்னவோ, மற்ற கட்சிகள்ல இருந்து உங்க கட்சியில ஊடுருவியவங்கதான், பழையபடி திரும்பிப் போறாங்களோ என்ற, 'டவுட்'தான் வருது!
கர்நாடக மாநில பா.ஜ., தலைவர் விஜயேந்திரா: தேர்தல் சமயத்தில் கொடுத்த இலவச வாக்குறுதி திட்டங்களை நிறைவேற்ற, நிதி திரட்டும் முனைப்பில் உள்ள கர்நாடக காங்., அரசின் முதல்வர் சித்தராமையா, அரசு மருத்துவ மனைகளில் ஸ்கேன் உள்ளிட்டவற்றுக்கான கட்டணத்தை, 20 சதவீதம் உயர்த்தி உள்ளார். கர்நாடக அரசின் நடவடிக்கைகள், ஏழைகளுக்கு விரோதமானதாக உள்ளன.
டவுட் தனபாலு: இந்த உலகத்தில் எதுவுமே இலவசம் கிடையாது... எந்த அரசியல்வாதியும், அவங்க சொந்த பணத்தில் இலவசங்களை தருவது இல்லை... ஒருபக்கம் மக்களுக்கு இலவசங்களை குடுத்துட்டு, மறுபக்கம் இப்படி கட்டணங்களை ஏத்தி, திருப்பி எடுத்துடுறாங்க என்பதில், 'டவுட்'டே இல்லை!
அ.தி.மு.க., கொள்கை பரப்பு துணைச்செயலர் பாப்புலர் முத்தையா: திருநெல்வேலி தொகுதி லோக்சபா தேர்தலில் சில 'பூத்'களில், நாம் தமிழர் கட்சியை விட அ.தி.மு.க., குறைவான ஓட்டுகள் பெற்று உள்ளது; இன்னும் சிறப்பாக பணியாற்றி இருந்தால், அதிக ஓட்டுகள் பெற்றிருக்க முடியும். கடந்த வாரம் நடந்த வாக்காளர் சேர்ப்பு முகாமில் கூட, மாவட்டச் செயலர் கணேசராஜா பங்கேற்க வில்லை. புதிய நிர்வாகிகளை அழைத்துக் கொண்டு, பழனிசாமியை சந்திக்க சேலம் சென்று விட்டார்; அன்று, நான் தான் கள ஆய்வில் ஈடுபட்டேன்.
டவுட் தனபாலு: அதானே... நீங்க முருகன் மாதிரி, தொகுதி யில சுத்தி வந்து வாக்காளர்களை சேர்க்க, கணேசராஜாவோ, பிள்ளையார் பாணியில் சேலம் போய் பழனிசாமியை பார்த்து, நல்ல பெயர் எடுத்துட்டு வந்துட்டாரே... உங்க கட்சி நிலவரம் இப்படி இருந்தா, சீமான் மட்டுமில்ல, விஜய் கட்சிகூட உங்களை, 'ஓவர்டேக்' பண்ணிடும் என்பதில், 'டவுட்'டே இல்லை!

