PUBLISHED ON : டிச 26, 2024 12:00 AM

 வி.சி., கட்சி துணை பொது செயலர் வன்னியரசு: குறைந்தபட்சம் இரட்டை இலக்கத்தில் வி.சி., உறுப்பினர்கள் சட்டசபையில் இருக்க வேண்டும். அதற்காக, வரும் சட்டசபை தேர்தலில் தி.மு.க., கூட்டணியில், 25 இடங்களில் வி.சி.,க்கள் போட்டியிட வேண்டும் என்பது கட்சியின் அடிமட்ட தொண்டன்ஆசையாக உள்ளது. அந்த எண்ணிக்கையை, தி.மு.க., விடம் இருந்து திருமாவளவன் பெற்று தருவார் என்ற நம்பிக்கையும் கட்சி தொண்டர்களிடம் உள்ளது.
டவுட் தனபாலு: அது சரி... தொண்டர்கள் ஆசையை திருமாவளவன் நிறைவேற்றுகிறாரோ இல்லையோ, தி.மு.க., வின் விருப்பத்தை தட்டாம நிறைவேற்றுவார்... அந்த வகையில், ஆதவ் அர்ஜுனா வரிசையில் வன்னி அரசுக்கும் இடம் கிடைச்சிடுமோ என்ற, 'டவுட்'தான் வருது!
lll
வி.சி., கட்சி தலைவர் திருமாவளவன்: தமிழகத்தில் போதைப் பொருட்கள் புழக்கம்பெருகி உள்ளது; அதை தடுக்க வேண்டும். குக்கிராமங்கள் வரை போதைப் பொருட்களின் பாதிப்பு இருப்பதை உணர முடிகிறது. மதுக் கடைகளையும் மூட வேண்டும். இது தொடர்பாக, அரசை மீண்டும் வலியுறுத்துகிறோம். எங்களுக்கு தி.மு.க., மீது எந்த அதிருப்தியும் இல்லை.
டவுட் தனபாலு: உங்களுக்கு தி.மு.க., மீது அதிருப்தி இல்லாம இருக்கலாம்... ஆனா, இப்படி வாழைப்பழத்தில் ஊசி ஏத்துவது போல அரசை குற்றம் சாட்டிட்டே இருந்தால், உங்க மேல அவங்களுக்கு அதிருப்தி உருவாகிடும் என்பதில், 'டவுட்'டே இல்லை... ஒருவேளை, அதைத்தான் நீங்களும் எதிர்பார்க்கிறீங்களோ என்ற, 'டவுட்'டும் கூடவே வருது!
lll
பா.ம.க., நிறுவனர் ராமதாஸ்: அமைச்சர் துரைமுருகன், கருணாநிதிக்கு மிக நெருங்கியவர், அனுபவம் வாய்ந்தவர். அவருக்கு முதல்வர், துணை முதல்வராவதற்கு அனுபவமும்,அறிவும், தகுதியும் இருக்கிறது.கட்சிக்காக எவ்வளவோ தியாகம் செய்துள்ளார். எத்தனையோ முறை சிறைக்கு சென்றிருக்கிறார். அப்படிப்பட்டவருக்கு துணை முதல்வர்பதவி கொடுக்க, முதல்வர் ஸ்டாலினுக்கு மனமில்லை. பாவப்பட்ட வன்னியர் சமுதாயத்தில் துரைமுருகன் பிறந்திருப்பது தான் ஒரே காரணம். ஆனால், உதயநிதியை துணை முதல்வராக்கி விட்டார்.
டவுட் தனபாலு: உங்க கட்சியின் ஜி.கே.மணியும் கூடத்தான் பல வருஷங்களா பா.ம.க.,வுக்கு உழைச்சிருக்கார்... ஜெயிலுக்கு எல்லாம் போயிருக்கார்... நாளைக்கே பா.ம.க., ஆட்சிக்கு வந்தால், அவரை முதல்வராக்குவீங்களா அல்லது அன்புமணியை முதல்வராக்குவீங்களா என்ற, 'டவுட்' வருதே!
lll

