PUBLISHED ON : டிச 29, 2024 12:00 AM

தமிழக அறநிலைய துறை அமைச்சர் சேகர்பாபு: சென்னை அண்ணா பல்கலையில், மாணவி பாதிக்கப்பட்ட சம்பவத்தில் உடனடியாக கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதை நடுநிலையாளர்கள் அனைவரும் பாராட்டு கின்றனர். தமிழக முதல்வர் உத்தரவிட்டு தான், காவல் துறையில் அனைத்து பணிகளும் நடக்கின்றன.
டவுட் தனபாலு: 'முதல்வர் உத்தரவிட்டு தான் எல்லா பணிகளும் நடக்குது'ன்னு நல்லா யோசித்து தான் சொல்றீங்களா...? ஏன்னா, 'பாதிக்கப்பட்ட பெண்ணின் அடையாளத்தை பகிரங்கப்படுத்திய எப்.ஐ.ஆர்., வெளியானதும் முதல்வர் சொல்லிதான் நடந்துச்சா'ன்னு எதிர்க்கட்சிகள் கேட்டால், எப்படி சமாளிப்பீங்க என்ற, 'டவுட்' வருதே!
lll
மதுரை ஆதீனம்: சென்னை, அண்ணா பல்கலை வளாகத்துக்குள்ளேயே, மாணவிக்கு பாலியல் கொடுமை நடந்திருப்பதாக புகார் எழுந்துள்ளது. கல்வி நிறுவனங்களில் நடைபெறும் பாலியல் ரீதியிலான குற்றச்சாட்டுகளுக்கு, அரசு மட்டுமே முடிவு கட்ட முடியாது. பெற்றோர்களும் தங்களுடைய பிள்ளைகள், படிப்பில் மட்டுமே கவனம் செலுத்துகின்றனரா என்பதை பார்க்க வேண்டும்; அதற்காக, அவர்களை கண்காணிக்க வேண்டும்.
டவுட் தனபாலு: நீங்க சொல்வது, நுாற்றுக்கு நுாறு உண்மை... எல்லாரும் அரசு மீது குறை சொல்லிட்டு இருக்கிற நேரத்தில், பிரச்னைக்கான மற்றொரு கோணத்தையும் ஆராய்ந்து, பெற்றோரை நீங்க எச்சரிக்கை பண்ணியிருப்பது, வரவேற்கப்பட வேண்டிய கருத்து என்பதில், 'டவுட்'டே இல்லை!
lll
தமிழக முதல்வர் ஸ்டாலின்: இந்திய கம்யூ., மூத்த தலைவர் நல்லகண்ணுவின் 100வது பிறந்த நாள் கொண்டாடப்படுகிறது. நல்லகண்ணு பிறந்த துாத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில், அரசு மருத்துவமனை சி.டி., ஸ்கேன் வசதியுடன் தரம் உயர்த்தப்படும். புதிய மருத்துவமனை கட்டடத்திற்கு, 'தோழர் நல்லகண்ணு நுாற்றாண்டு கட்டடம்' என பெயரிடப்படும்.
டவுட் தனபாலு: இன்று நம்முடன் வாழும் தலைவர்களில் அப்பழுக்கற்ற அரசியல்வாதி என்றால், அது நல்லகண்ணு மட்டும் தான் என்பதில், 'டவுட்'டே இல்லை... அவரது பெயரை, மாநில தலைநகரில் பெரிய கட்டடத்துக்கு சூட்டாமல், ஸ்ரீவைகுண்டம் என்ற சிறிய ஊருடன் முடக்குவது சரியா என்ற, 'டவுட்' வருதே!
lll

