PUBLISHED ON : ஜன 08, 2025 12:00 AM

தமிழக பா.ஜ., பிரமுகரும், சினிமா இசை அமைப்பாளருமான தீனா: தி.மு.க.,வின் மூதாதையரான அண்ணாதுரை பெயரில் செயல்படும் பல்கலையில் நடந்த பாலியல் சம்பவம் வெட்கக்கேடானது. பாதிக்கப்பட்ட மாணவி அளித்த புகாரில் குறிப்பிட்டுள்ள, 'அந்த சார் யார்?' என்ற கேள்வி எழுந்துள்ளது. அந்த சார் ஒரு அரசியல்வாதியாகத்தான் இருக்க வேண்டும். எந்த கட்சியை சேர்ந்தவர் என்பது தான் புதிராக உள்ளது.
டவுட் தனபாலு: 'சிந்து சமவெளி எழுத்துகளுக்கு அர்த்தம் கண்டுபிடிச்சு சொன்னால், 8.50 கோடி ரூபாய் பரிசு'ன்னு முதல்வர் அறிவிச்சிருக்காரே... அந்த மாதிரி, 'யார் அந்த சார்?' என்பதை கண்டுபிடிக்கிற போலீசுக்கும் ஒரு பரிசு தொகை அறிவித்தால் என்ன என்ற, 'டவுட்' எழுதே!
மா.கம்யூ., மாநில செயலர் சண்முகம்: தி.மு.க.,வுடன், நாங்கள் பலமுறை உறவோடும், எதிர் அணியிலும் இருந்துள்ளோம். தி.மு.க., ஆதரவால் தான் மா.கம்யூ., உள்ளது என்பது அதீத கருத்து. மக்கள் பிரச்னைக்கு போராடுவதால் தான் மக்களிடம் மா.கம்யூ., வலுவாக உள்ளது. ஏதோ, தி.மு.க., வெளிச்சத்தில் மா.கம்யூ., உள்ளதாக தி.மு.க., தலைமை கூறியிருப்பது சரியல்ல. அதற்காக, 'முரசொலி' பத்திரிகையில்அவர்கள் கருத்து வெளியிட்டு உள்ளதும் பொருத்தமானதல்ல.
டவுட் தனபாலு: உங்களிடம் பதவியை கைமாத்தி விட்ட பாலகிருஷ்ணன், தி.மு.க., அரசை விமர்சித்து, பிள்ளையார் சுழி போட்டிருக்கார்... புதுசா வந்திருக்கிற நீங்களும், 'அதை தொடர்வேன்' என்பதை தெளிவாக சொல்லிட்டீங்க... ஒருவேளை தி.மு.க., கூட்டணிக்கு முழுக்கு போடவே, உங்க கட்சியில் தலைமை மாற்றம் நடந்திருக்கோ என்ற, 'டவுட்'தான் வருது!
தமிழக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி: வரும் 2026 சட்டசபை தேர்தலை, இன்னும் 365 நாட்களில் சந்திக்கும் நாம், 200 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். நம் கட்சியினர் தொழிலை விட்டுவிட்டு, முழு நேர அரசியல் செய்ய அவசியமில்லை. தினமும் ஒரு மணி நேரம் கட்சி பணி செய்யுங்கள். பொங்கலுக்கு பின், அரசின் வாயிலாக நிறைய வேலைவாய்ப்புகள் வர உள்ள நிலையில், தகுதியின் அடிப்படையில் இளைஞர்களுக்கு வேலை வழங்கப்படும்.
டவுட் தனபாலு: 'பொங்கலுக்குபின் அரசு வேலைவாய்ப்புகள்ல, கட்சியினருக்கு மட்டுமே முன்னுரிமை தரப்படும்... அதை மனசுல வச்சுக்கிட்டு தேர்தல் பணியில இறங்குங்க'ன்னு சொல்வது, 'டவுட்'டே இல்லாம தெரியுது!

