PUBLISHED ON : ஜன 17, 2025 12:00 AM

தமிழக கவர்னர் ரவி: தமிழகத்தில், 60 ஆண்டுகளுக்கு மேலாக, சமூக நீதி பற்றி பேசுகின்றனர்; ஆனால், சமூக பாகுபாடு தொடர்ந்து நடந்து வருகிறது. தலித் சகோதர - சகோதரிகளை ஏற்றத்தாழ்வுகளுடன் பார்க்கிறோம். அவர்களுக்கு எதிரான வன்முறை அதிகரித்துள்ளது. சமூக நீதி பற்றி அதிகமாக பேசுபவர்கள், வள்ளலாரை பின்தொடர்ந்திருந்தால் இந்நிலை மாறியிருக்கும்.
டவுட் தனபாலு: நீங்க சொல்ற, 60 வருஷங்கள்ல, 58 வருஷங்கள் திராவிட இயக்கங்களின் ஆட்சி தான் நடந்துச்சு; நடந்துட்டும் இருக்குது... ஈ.வெ.ரா., வழி நடக்கிறவங்க ஆட்சியில் தான், கீழ்வெண்மணியில் தலித் விவசாயிகள் உயிருடன் எரிப்பு, வேங்கைவயலில் தலித்துகள் குடிக்கும் நீரில் கழிவுகள் கலப்பது போன்ற கொடுமைகள் எல்லாம் நடக்குது... தமிழகத்தில் சமூக நீதி என்பது, ஏட்டளவில் தான் இருக்குது என்பதில், 'டவுட்'டே இல்லை!
தமிழக காங்., தலைவர் செல்வப்பெருந்தகை: ஈ.வெ.ரா.,வை சீமான் விமர்சிக்கும் போது, பா.ஜ.,வினர் கண்டிக்க மாட்டார்கள். பா.ஜ.,வின் செயல் திட்டங்களையே சீமான் நடைமுறைப்படுத்துகிறார். பா.ஜ.,வின் ஊன்றுகோலாக சீமான் இருக்கிறார். ஈ.வெ.ரா.,வை விமர்சித்து விட்டு, ஈரோட்டில் எப்படி சீமானால் ஓட்டு கேட்க முடியும்?
டவுட் தனபாலு: பல கட்சிகள் மாறி காங்கிரசுக்கு வந்த தங்களுக்கு, ஈ.வெ.ரா., வரலாறு தெரியாது போலும்... ஏன்னா, ஈ.வெ.ரா., ஒரு காலத்துல உங்க காங்கிரஸ்ல தான் இருந்தார்... அங்கு நிலவிய ஜாதி பேதங்களை எதிர்த்து வெளியே வந்து, தனி இயக்கம் துவங்கினாரு என்ற உண்மை தெரியாமலே, அவருக்கு வக்காலத்து வாங்குறீங்களோ என்ற, 'டவுட்' வருதே!
தமிழக நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன்: தமிழக கவர்னர் ரவி, அவருக்கு உரிய மரியாதையை இழந்து விட்டார். கவர்னர், ஒரு அரசியல்வாதி போல மேடைதோறும் பேசுவதை, இனியாவது குறைக்க வேண்டும். அது அவருக்கும் நல்லது; அவர் சார்ந்திருக்கும் பொறுப்புக்கும் மரியாதை ஏற்படுத்தக்கூடியது. இதை அவர் செய்யாவிட்டால், செய்வது போன்று நடவடிக்கை எடுக்க வேண்டியிருக்கும்.
டவுட் தனபாலு: 'கவர்னர் கமுக்கமாக ராஜ் பவனில் ஓய்வு எடுத்தபடி, நாங்க அனுப்புற பைல்கள்ல கையெழுத்து போட்டு தந்துட்டே இருக்கணும்... அதை விட்டுட்டு, மேடைகள்தோறும் போய், திராவிட மாடல் ஆட்சியில் இல்லாத சமூக நீதி பத்தி எல்லாம் பேசக் கூடாது'ன்னு மிரட்டுறீங்களோ என்ற, 'டவுட்' தான் வருது!