PUBLISHED ON : ஜன 23, 2025 12:00 AM

த.வெ.க., தலைவர் விஜய்: காஞ்சிபுரம் மாவட்டம், பரந்துாரில் விமான நிலையம் அமைக்கும் முடிவை மத்திய, மாநில அரசுகள் கைவிட வேண்டும். இந்த பிரச்னையில் மக்களோடு கடைசி வரை நிற்பேன். உடனே, என்னை வளர்ச்சிக்கு எதிரானவன்னு சொல்லி முத்திரை குத்த பாப்பாங்க. ஏர்போர்ட் வரணும்னு தான் நானும் சொல்றேன். ஆனா, பரந்துார்ல வேண்டாம்கிறது தான் என்னோட கோரிக்கை.
டவுட் தனபாலு: சரி, பரந்துார்ல ஏர்போர்ட் வேண்டாம்னு சொல்றீங்களே... விவசாயத்தையும், நீர்நிலைகளையும் பாதிக்காத வகையில், சென்னைக்கு பக்கத்துல, 1,000 ஏக்கருக்கு மேல எங்காவது நிலம் இருந்தால், அதை உங்க கட்சி பிரமுகர்கள் வாயிலாக அடையாளம் கண்டு, அரசுக்கு எடுத்து சொன்னால், 'டவுட்'டே இல்லாம உங்களை பாராட்டலாம்!
சிவகங்கை காங்., - எம்.பி., கார்த்தி: சென்னை விமான நிலையம் மிக மோசமாக உள்ளது. மத்திய, மாநில அரசுகள் பரந்துாரில் சர்வதேச விமான நிலையம் அமைப்பதற்கு ஒற்றுமையுடன் முடிவு செய்து நடவடிக்கை எடுத்துள்ளன. இதை வேண்டாம் என்று கூறுவது, அரசியல் தலைவருக்கு நல்லதல்ல. த.வெ.க., தலைவர் விஜய், தமிழக வளர்ச்சிக்கு எதிராக பேசுகிறார்; மக்களை துாண்டுகிறார்.
டவுட் தனபாலு: அதானே... கட்சி துவங்கி, ஒரு வருஷமா பரந்துார் எங்க இருக்குன்னு கூட தெரியாத விஜய், திடீர்னு பரந்துார் மீது பாசம் காட்டுவது பல்வேறு, 'டவுட்'களை கிளப்புதே... பரந்துார் திட்டத்தை வாபஸ் பெறும் வரை உண்ணாவிரதப் போராட்டம் இருந்தால், விவசாயிகளின் தோழர் விஜய் என்பதை, 'டவுட்'டே இல்லாம ஏத்துக்கலாம்!
தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர்: புதுக்கோட்டை, திருமயத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஜெகபர் அலி மரணம் தொடர்பாக, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலையும், அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமியும் அப்பட்டமாக ஒரே வரிகளை சமூக வலைதளத்தில் பதிவிட்டு, சந்தி சிரிக்க வைத்திருக்கின்றனர். அண்ணாமலை போட்ட பதிவை அப்படியே வழிமொழிந்து, 'பசையே' இல்லாமல், 'காப்பி பேஸ்ட்' செய்திருக்கிறார் பழனிசாமி.
டவுட் தனபாலு: ஏதோ ஜெகபர் அலி, உடம்பு சரியில்லாம இறந்துபோன மாதிரி, மரணம்னு சிம்பிளா சொல்றீங்களே... லாரியை ஏத்தி கொடூரமா கொலை பண்ணின சம்பவத்தை, எதிர்க்கட்சிகள் கண்டிக்கவே கூடாது என்பதற்கும், ஹிட்லரின் பாசிச கொள்கைக்கும் ஏதாவது வேறுபாடு இருக்குதா என்ற, 'டவுட்' வருதே!

