PUBLISHED ON : ஜன 24, 2025 12:00 AM

 தமிழக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி: 'இண்டியா' கூட்டணியை உருவாக்கியவர் தமிழக முதல்வர் ஸ்டாலின். இக்கூட்டணி லோக்சபா தேர்தலில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் போட்டியிட்ட அனைத்திலும் வெற்றி பெற்றது. சட்டசபை தேர்தலிலும் இந்த வெற்றி தொடரும்; 200 தொகுதிகளில் வெற்றி என்பது, தற்போது கூடுதலாகி வருகிறது.
டவுட் தனபாலு: 'இண்டியா' கூட்டணியை உருவாக்கியவர், பீஹார் முதல்வர் நிதிஷ் குமார்... சந்தடி சாக்குல, ஸ்டாலின் தான்னு அடிச்சு விடுறீங்களே... உலகத்துக்கே தெரிஞ்ச ஒரு விஷயத்துலயே இப்படி உண்மையை மறைக்கிற நீங்க, உங்க துறையில எவ்வளவு விஷயங்களை ஒளிவுமறைவா செய்றீங்களோ என்ற, 'டவுட்' வருதே!
அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி: -மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, என்னை, 'அமைதிப்படை பழனிசாமி' என, விமர்சித்துள்ளார். இது, செந்தில் பாலாஜிக்கு தான் பொருத்தமான பெயர். ஐந்து கட்சிக்கு சென்று வந்தவர் அவர்தான். தற்போது, தி.மு.க.,வில் உள்ளார். அடுத்து எந்த கட்சிக்கு போவார் என தெரியவில்லை.
டவுட் தனபாலு: அவரை அதிகமா விமர்சிக்காதீங்க... இப்படித்தான், செந்தில் பாலாஜி உங்க கட்சியில் இருந்தப்போ, தற்போதைய முதல்வர் ஸ்டாலினும் அன்று கடுமையாக விமர்சித்தார்... இப்ப, கூடவே வச்சிருக்காரு... எதிர்காலத்துல உங்களுக்கும் அந்த தர்மசங்கடம் வரலாம் என்பதில், 'டவுட்'டே இல்லை!
கள் இயக்க தலைவர் நல்லசாமி: ஒரு அரசின் கடமை, குடிமக்களுக்கு சத்தான உணவை வழங்குவது. இரண்டாவது, வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவது. மூன்றாவது, உடல் நலத்தை பேணுவது. தொடர்ந்து மதுவை குடித்து அடிமையாய் இருக்கும் ஒருவருக்கு இந்த கள் அருமருந்தாகும். நாங்கள் கள் விற்க, இறக்க அனுமதி கேட்கவில்லை. எங்கள் உரிமையை நாங்களே எடுத்துக் கொள்கிறோம். எம்.ஜி.ஆருக்குப் பின் வந்த ஆட்சியாளர்கள், கள் தடையால் பெரும் ஆதாயத்தை பெற்று வருகின்றனர்.
டவுட் தனபாலு: கள் நல்லதோ, கெட்டதோ தெரியலை... ஆனா, கள் விற்பனைக்கு அனுமதி அளிப்பது என்பது அரசின் கஜானாவுக்கும், ஆட்சியாளர்களின் கல்லாப்பெட்டிக்கும் ஒருசேர வேட்டு வைக்கும் என்பதுதான், 'டவுட்'டே இல்லாத உண்மை!

