PUBLISHED ON : ஜன 28, 2025 12:00 AM

தமிழக ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன்: வரும் 2026 தேர்தலிலும், தி.மு.க.,வே, 200க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறும் எழுச்சி உள்ளது. இதையெல்லாம் கேட்டு கவர்னர் ரவி, விக்கித்து போயிருப்பார். அரசியல் செய்ய ஆசை இருந்தால், அப்பதவியில் இருந்து விலகி, அவர் எங்களோடு நேருக்கு நேர் அரசியல் களத்திற்கு வரட்டும்.
டவுட் தனபாலு: இப்ப எதிர்க்கட்சிகள் வரிசையில் இருக்கும் அ.தி.மு.க., - பா.ஜ., தலைவர்களின் குற்றச்சாட்டுகளுக்கே உங்களால பதில் தர முடியலை... கவர்னர் ரவி போன்ற நாலும் தெரிஞ்சவங்க அரசியல் களத்தில் இறங்கி, உங்களை கேள்வி கேட்க ஆரம்பித்தால், நீங்க தாக்கு பிடிப்பீங்களா என்பது, 'டவுட்'தான்!
வி.சி., கட்சி தலைவர் திருமாவளவன்: வேங்கைவயல் பிரச்னையில் சி.பி.சி.ஐ.டி., விசாரணை ஏமாற்றம் அளித்துஉள்ளது. இரண்டு ஆண்டு கால விசாரணைக்கு பின், பாதிக்கப்பட்டவர்களே குற்றவாளிகள் என்று கூறியிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. சி.பி.ஐ., மீதும் எங்களுக்கு நம்பிக்கை இல்லை. அதேநேரம், தமிழக காவல் துறை மீது நம்பிக்கை இழந்ததால், சி.பி.ஐ., விசாரணை கோருகிறோம்.
டவுட் தனபாலு: காவல் துறை மீது நம்பிக்கை இல்லை என்றால், அதற்கு பொறுப்பு வகிக்கும் முதல்வர் மீதே நம்பிக்கை இல்லை என்று தானே அர்த்தம்... வேங்கைவயல் போன்ற உணர்வு பூர்வமான பிரச்னையில், முதல்வரின் ஒப்புதல் இல்லாம சி.பி.சி.ஐ.டி., அறிக்கை தாக்கல் செய்திருக்குமா என்ற, 'டவுட்' உங்களுக்கு வந்துட்டுன்னு நல்லாவே தெரியுது!
அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ஜெயகுமார்: எதிர்க்கட்சியாக இருந்த போது, பிரதமருக்கு கருப்புக்கொடி காட்டி விட்டு, ஆளுங்கட்சியானதும் வெள்ளைக்குடை பிடித்த தைரியமான தலைவர் யார் என்பது தெரியும். மத்தியில் ஆட்சி அதிகாரத்திற்காக, காங்கிரஸ், பா.ஜ.,விற்கு முதுகு வளைந்து சேவை செய்ததை, தி.மு.க.,வினர் மறந்து விடக்கூடாது. ஆட்சியை காப்பாற்றிக் கொள்ள, தங்கள் நிலைப்பாட்டை அடிக்கடி மாற்றிக் கொள்ளும் கட்சி தி.மு.க., தான்.
டவுட் தனபாலு: தமிழகத்தில் நீங்க ஆட்சியில் இருந்தப்ப, மத்திய அரசு கொண்டு வந்த மூன்று வேளாண் திருத்த சட்டங்களை விழுந்து விழுந்து ஆதரித்தீங்களே... ஆட்சியை விட்டு இறங்கியதும், அதே சட்டங்கள் விவசாயிகளுக்கு எதிரானது என்று உங்க நிலைப்பாட்டை மாத்திக்கிட்டது மட்டும் சரியா என்ற, 'டவுட்' வருதே!

